ரஷ்ய பெட்ரோலியப் பொருட்களை சாதனை அளவிற்கு இறக்குமதி செய்த உக்ரைன் ஆதரவு ஆசிய நாடு
உக்ரைனின் தீவிர ஆதரவாளரான தைவான், ரஷ்ய நாப்தாவை உலகிலேயே மிக அதிக அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரஷ்ய நாப்தா
மேற்கத்திய நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க, அதற்கும் தைவான் ஆதரவளித்து வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், தைவான் 1.3 பில்லியன் டொலர் மதிப்பிலான ரஷ்ய நாப்தாவை இறக்குமதி செய்துள்ளது.
மேலும், தைவானின் சராசரி மாதாந்திர இறக்குமதி என்பது கடந்த 2022 ஆண்டின் சராசரியை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தைவானின் நாப்தா இறக்குமதி 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக தைவான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
மட்டுமின்றி, தைவான் வெளிவிவகார அமைச்சர் லின் சியா-லுங், ரஷ்யாவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக போலந்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஏற்றுமதி கட்டுப்பாடு
2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேசத் தடை விதிப்பில் தைவான் இணைந்தது. மட்டுமின்றி, தைவானின் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை ரஷ்ய இராணுவம் பயன்படுத்துவதைத் தடுக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
ஆனால் போர் தொடங்கிய பிப்ரவரி 2022 முதல், தைவான் 6.8 மில்லியன் டன் ரஷ்ய நாப்தாவை இறக்குமதி செய்துள்ளது, இதன் மதிப்பு 4.9 பில்லியன் டொலராகும். இது ரஷ்யாவின் மொத்த பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில் 20 சதவீதத்திற்கு சமம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |