நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம்... பெண் பிரதமரின் கருத்தால் வெடித்த சர்ச்சை
இரவில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் மட்டுமே தாம் தூங்குவதாக குறிப்பிட்டுள்ள ஜப்பான் பிரதமர், மக்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என ஊக்குவிக்கும் அவரது கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
சருமத்திற்குக் கேடு
ஜப்பானில் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான நடவடிக்கைகளை முடிவு செய்ய அதிகாரிகளுக்கான கூட்டத்தை அதிகாலை 3 மணிக்கு அவர் முடிவு செய்ததை அடுத்தே, பிரதமரின் தூக்கம் தொடர்பிலான விவாதம் எழுந்தது.

இந்த நிலையில், 2ல் இருந்து அதிகபட்சமாக 4 மணி நேரம் மட்டுமே தாம் தூங்குவதாகவும், அதற்கு மேல் தூங்கினால் அது தமது சருமத்திற்குக் கேடு என தாம் நினைப்பதாகவும் நாடாளுமன்றக் குழுவிடம் பிரதமர் Sanae Takaichi தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் அமுலில் இருக்கும் மோசமான நீண்ட வேலை நேரத்தைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட நிலையிலேயே தமது தூக்கம் தொடர்பில் பிரதமர் சனே தகைச்சி விளக்கமளித்துள்ளார்.
ஜப்பான் நீண்ட காலமாக ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்த போராடி வருகிறது, பல தொழிலாளர்கள் அலுவலகத்தில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி
மட்டுமின்றி, வேலைப்பழுவால் மரணமடையும் மக்களைக் குறிக்கும் karoshi என்ற வார்த்தையும் ஜப்பானில் புழக்கத்தில் உள்ளது. இதனிடையே, ஜப்பானில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேலை நேரத்தை அதிகரிப்பது தொடர்பிலான அரசாங்கத்தின் விவாதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
வேலை நேரம் அதிகரிப்பது தொடர்பிலான விவாதங்களை ஆதரித்த அவர், ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இருவேறு தேவைகள் இருப்பதாகவும், சில ஊழியர்கள் தங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இரண்டு வேலைகள் பார்க்கும் சூழலும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேலை நேரத்தில் மாற்றம் கொண்டுவருவதாக இருந்தால், கண்டிப்பாக ஊழியர்களின் ஆரோக்கியம் தொடர்பிலும் கருத்தில் கொள்ளப்படும் என்றார். ஜப்பான் அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராக தகைச்சி கடந்த மாதம் பொறுப்புக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |