இந்தியர்களுக்கு காபூல் விமான நிலையம் வரை துணைக்கு வந்த தாலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் தூதரகத்திலிருந்து வெளியேறிய இந்தியர்கள்களுக்கு காபூல் விமானநிலையம் வரை துணையாக ஆயுதமேந்திய தாலிபான்களே வந்தார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவசர அவசரமாக இந்தியர்கள் சிலருடன் முதல் விமானம் புறப்பட்டு இந்தியா வந்தது.
ஆனால், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட 140 பேரை மீட்பதற்காக அடுத்த விமானத்தை அனுப்புவதற்குள் அங்கு நிலைமை மோசமானது. ஆப்கன் வான்வழி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள இந்தியர்களின் நிலை என்னவென்று கேள்விக்குறி எழுந்த நிலையில், திங்கள் நள்ளிரவு 140 இந்தியர்கள் பத்திரமாக விமானநிலையம் அழைத்துவரப்பட்டனர்.
அவர்களுக்கு துணையாக ஆயுதமேந்திய தாலிபான்களே வந்தார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தாலிபான்களை ஆதரித்து வளர்த்தது பாகிஸ்தான். அதனாலேயே இந்தியா தாலிபான்களை எதிர்த்து ஆப்கனுக்கு உதவிகளை செய்துவந்தது.
திங்கள் இரவு காபூலில் இந்தியத் தூதரகத்தின் வெளியே தாலிபான்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்திருக்க உள்ளே இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர்.
காபூல் விமானநிலையத்தில் இந்திய ராணுவ விமானம் காத்திருக்கிறது. ஆனால், விமானநிலையத்தின் க்ரீன் ஜோன் வரை பாதுகாப்பாகச் செல்ல வேண்டுமே என்ற கலக்கத்தில் அவர்கள் இருந்தனர்.
ஒருவழியாக அனைவரும் 24 வாகனங்களில் இந்தியத் தூதரகத்தில் இருந்து புறப்பட்டனர். ஆயுதம் ஏந்திய தாலிபான்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் நிலவியது.
ஆனால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்ப அங்கிருந்த தாலிபான்கள் இந்தியர்கள் இருந்த வாகனத்தை நோக்கி வழியனுப்புவது போல் கையசைத்துள்ளனர். சிலர் வாகனங்களில் இருந்தவர்களைப் பார்த்து புன்னைகைத்துள்ளனர். இதனை ஒரு வாகனத்தில் இருந்த ஏஎஃப்பி செய்தியாளர் கூறியுள்ளார்.
அத்துடன் நில்லாமல், ஆயுதம் ஏந்திய ஒரு சிலர் இன்னொரு வாகனத்தில் ஏறிக்கொண்டு, இந்தியர்கள் இருந்த வாகனங்களுடனேயே விமானநிலையத்தின் க்ரீன்ஜோன் வரை வந்தார். அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்று வாகனங்களில் இருந்தவர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை.
ஆனால், தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் வரும் வாகனங்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என இந்தியத் தூதரகத்தின் சார்பில் தாலிபான்களிடம் வலியுறுத்தியதாகவும், அதனாலேயே இந்தியத் தூதரகத்தின் வாயிலில் இருந்த தாலிபான்கள் வழிநெடுகிலும் மற்ற தாலிபான் வீரர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்து பயணத்தை எளித்தாக்கும் வகையில் உடன் வந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தூதரகத்தில் இருந்து விமானநிலையத்துக்கு 5 கிலோமீட்டர் தூரம். இருள் சூழ்ந்த அந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியும் திக்திக்கென இருந்ததாக அந்தக் குழுவில் இருந்த சிலர் கூறுகின்றனர். நான் கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்..
இந்தப் பயணம் சாத்தியமானது குறித்து ஏர் இந்தியா ஊழியர் ஷிரினி பத்தாரே கூறுகையில், நாங்கள் வரும் வழியெல்லாம் அடிக்கொரு சோதனைச் சாவடி போல் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சில நேரங்களில் எங்கள் வாகனங்களுக்குத் துணையாக வந்த தாலிபான் வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி அவ்வப்போது வானத்தை நோக்கிச் சுடுவார். அப்போதெல்லாம் உயிர் நின்றது போல் இருந்தது.
விமானநிலையத்தை அடைந்ததும் எங்களுடன் வந்த தாலிபான் வாகனம் திரும்பிச் சென்றது. அதன் பின்னர் விமானநிலையத்தில் 2 மணி நேரம் காத்திருந்தோம். பின்னர் சி17 இந்திய ராணுவ விமானத்தில் ஏறினோம். குஜராத்தில் விமானம் திரையிறங்கியது.
இந்தியாவுக்குத் திரும்பியதில் பெரும் மகிழ்ச்சி. இந்தியா ஒரு சொர்க்கம் என்று கூறினார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொருவர் கூறுகையில், நான் என் 2 வயது மகளுடன் என் அலுவலகத்தில் இருந்தேன். அங்கே சில தாலிபான்கள் வந்தனர். அவர்கள் என்னை ஏதும் செய்யவில்லை.
மென்மையாகவே விசாரித்தனர். நான் அச்சத்தில் இருந்தேன். பின்னர் சென்றுவிட்டனர். அவர்கள் செல்லும்போது வாசலில் இருந்த இரண்டு வாகனங்களை எடுத்துச் சென்றனர். அந்தத் தருணம் நான் வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.