மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் தாலிபான்களின் கொடூர முகம்: அம்பலப்படுத்தும் அறிக்கை
ஜனநாயக முறைப்படி ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை முன்னெடுப்பதாக கூறிய தாலிபான்கள், கடந்த நான்கு மாதங்களில் செய்த கொடூரங்கள் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சிக்கு வந்துள்ள தாலிபான்கள், டசின் கணக்கான கைதிகளை தலையை துண்டித்து அல்லது பொதுவெளியில் தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறப்பு அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
குறித்த அறிக்கையில், தாலிபான்கள் தற்போது சிறார் படை ஒன்றை துவக்க இருப்பதாகவும், அதற்கான ஆள் சேர்க்கும் பணிகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 100 க்கும் மேற்பட்ட முன்னாள் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் பலர் தாலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், தாலிபான்களால் எதிரிகளாக பார்க்கப்படும் ஐ.எஸ் கொரோசான் தீவிரவாதிகள் 50 பேர்கள் வரையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
தாலிபான்களால் கைது செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினரை கடந்த ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சுமார் 72 படுகொலைகளை தாலிபான்கள் முன்னெடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கொலைச்சம்பவங்களில் உடல்களை பொதுவெளியில் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும், அது பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்டு மாதம் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 2 பத்திரிகையாளர்கள் மற்றும் குறைந்தது 8 ஆப்கானிஸ்தான் சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
ஆனால் தாலிபான்கள் தரப்பில் குறித்த அறிக்கையை நிராகரித்துள்ளதுடன், கொலைகள் தொடர்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.