பள்ளி முன் திரண்ட ஆப்கன் பெண்கள்: துப்பாக்கிச் சூடு நடத்திய தாலிபான்கள்
காபூலில் பள்ளி ஒன்றின் முன் சில பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் முகப்பு வாசலில் 6 பெண்கள் திரண்டு, மேல்நிலைப் பள்ளிக்கு பெண்கள் திரும்ப உரிமை கோரியுள்ளனர்.
அவர்கள் கையில் வைத்திருந்த பதாகையில், எங்களின் பேனாக்களை உடைக்காதீர்கள், எங்களின் புத்தகத்தை எரிக்காதீர்கள், எங்கள் பள்ளிகளை மூடாதீர்கள் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
ஆனால் தாலிபான்கள் அந்த பதாகையை அவர்களிடம் இருந்து பறித்துள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நெருக்கித் தள்ளி அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும் பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.
அதே நேரத்தில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் துப்பாக்கியால் தாக்கப்பட்டதுடன் தாலிபான்களால் அந்த காட்சிகளை பதிவு செய்வதில் இருந்தும் தடுக்கப்பட்டார்.
இதனிடையே தாலிபான் ஒருவர் வானத்தை நோக்கிச் சுட்டார். அப்போது அந்தப் பெண்கள், பள்ளிகளுக்குள் சென்று தஞ்சம் புகுந்தனர். பெண்கள் போராட்டம் தடுக்கப்பட்டது குறித்து தாலிபான் காவலர் மாவ்லவி நஸ்ரத்துல்லா கூறுகையில்,
ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டத்துக்கு அனுமதியுண்டு. வேறு எந்த நாட்டிலும் நடத்தப்படுவதுபோல் இங்கும் போராட்டங்களை நடத்தலாம். ஆனால், பாதுகாப்பு அமைப்பிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
இன்று போராட்டம் நடத்திய பெண்கள் உரிமை அமைப்பினர் எவ்வித அனுமதியும் பெறவில்லை. அதனாலேயே கூட்டத்தைக் கலைத்தோம் என்றார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், காபூல் உட்பட முக்கிய நகரங்களில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.