பொதுமக்களை குறிவைக்கும் தாலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் நிலை என்ன?
ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் சென்றதில் இருந்து பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கும் மேற்பட்ட வன்முறைக்கு தாலிபான்களே காரணம் என புதிய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
ஆட்சியை கைப்பற்றிய கையோடு தலைநகர் காபூலில் செய்தியாளர்கள் மாநாட்டை நடத்திய தாலிபான்கள், அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தனர்.
PHOTO: AP
இந்தநிலையில், தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி கிட்டத்தட்ட 10 மாதங்கள் நிறைவடைந்து இருப்பதற்கு மத்தியில், ஆயுத மோதல் இடம் மற்றும் நிகழ்வு திட்டம் (ACLED) வெளியிட்டுள்ள அறிக்கையில், தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொதுமக்கள் 818 பேர் மீது வன்முறை சம்பவங்கள் நடந்து இருப்பதாகவும், அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வன்முறைகளுக்கு தாலிபான்களே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக வெளியான அறிக்கையில் இணைந்து பணிபுரிந்த ஆப்கான் அமைதி குழுவின் நிறுவனர் ஹபீப் கான் தெரிவித்துள்ள கருத்தில், உண்மையான வன்முறை எண்ணிக்கைகள், வெளியான அறிக்கை தரவுகளை விடவும் அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
PHOTO: CNN
அத்துடன், ஆப்கானிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுத குழுக்களால் நடத்தப்பட்ட பெரும்பாலான வன்முறைகளுக்கு(35 சதவிகித) தாலிபான்களே காரணமாக இருக்கலாம் என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அனைவருக்குமான பொதுமன்னிப்பை தாலிபான்கள் வழங்குவதாக உறுதியளித்த போதிலும், தாலிபான்கள் முந்தைய ஆட்சிகாலத்தின் பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரசுத் துறை அதிகாரிகள், அத்துடன் பெண்கள், செய்தியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீதான வன்முறைகளை குறிவைத்து நடத்துவதாக ஹபீப் கான் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் ரஷ்ய துருப்புகளிடம் சிக்கிய அமெரிக்க வீரர்கள்: மரண தண்டனை விதிப்பு?
ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மொத்த தாக்குதலில் தாலிபான்களால் நடத்தப்பட்ட தாக்குதல் 444, அடையாளம் தெரியாத ஆயுத குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல் 286, இஸ்லாமிய அரசு நடத்தப்பட்ட தாக்குதலில் 62, பிற வன்முறை சம்பவங்கள் 26 என்ற எண்ணிக்கையில் நடைபெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.