இப்படி மட்டும் தான் படிக்க முடியும்... பெண்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தலிபான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் முதுகலை பட்டங்கள் உட்பட பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் என புதிய தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் Abdul Baqi Haqqani அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல், தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க கோரி நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இடைக்கால அரசாங்கத்தை தலிபான் அறிவித்தனர். ஐக்கிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் கீழ் அல்லது பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய புள்ளிகள் தலிபான் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் தலிபான் அல்லாதவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் Abdul Baqi Haqqani புதிய கொள்கைகளை அறிவித்தார்.
தலிபான்களின் ஆட்சியின் கீழ் கட்டாயப் ஆடை கட்டுப்பாடு உட்பட பல்கலைக்கழக மாணவிகள் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள்.
பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஹிஜாப் கட்டாயமாக்கப்படும். வகுப்பறைகள் பாலினம் அடிப்படையில் பிரிக்கப்படும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக படிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடங்களும் மறுஆய்வு செய்யப்படும் என புதிய தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் Abdul Baqi Haqqani அறிவித்துள்ளார்.