பெண்கள் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராட்டம்: துப்பாக்கிச் சூடு நடத்திய தாலிபான்கள்
பெண்களின் ஆடை கட்டுப்பாடுகள் தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பெண்களுக்கு ஆதரவாக போராட்டம்
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் புர்கா அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு சில பெண்கள் தாலிபான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து சமூக வலைதளம் மூலமாக ஒன்றுகூடிய 100 முதல் 150 ஆண்கள் ஹேரத் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, எங்கள் சகோதரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

துப்பாக்கிச் சூடு
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போராட்டக்காரர்கள் மீது தாலிபான் பாதுகாப்பு படையினர் தடியடிகள் சாட்டைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
வாகனங்களின் மீது போராட்டக் குழுவினர் மீதும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்தவர்கள் AFP செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதில் போராட்டக்காரர்கள் பலர் படுகாயமடைந்து இருப்பதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
தாலிபான்கள் மறுப்பு
ஹிஜாப் விதிகளுக்கு எதிராக போராடுபவர்கள் என்ற போர்வையில், சிலர் நாட்டில் பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்து வருவதாக ஹேரத் காவல் துறை செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் ஹிஜாப் அணியாத பெண்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தி வதந்தி என்றும், ஹிஜாப் அணிவது பெண்களின் கடவுளின் கட்டளை என்றும், அதை அமுல்படுத்துவது தாலிபான் அரசின் கடமை என்றும் தாலிபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |