இது கொடுங்குற்றம்..போர் தொடங்கினால்..! கடும் எச்சரிக்கை விடுத்த ஆப்கான்
தங்கள் நாட்டின் மீதான பாகிஸ்தானின் தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான் அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் 2,700 மீற்றர் தூரத்திற்கு எல்லையை பகிர்கின்றன. இருநாட்டு எல்லைப் பகுதியிலும் தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதுடன், இரு நாடுகள் மீதும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
குறிப்பாக, 'தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான்' பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்தவாறு தங்கள் நாட்டின் மீது தாக்குதல்களை அரங்கேற்றுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அந்நாட்டு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் ஆறுக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் ஷெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஆப்கானிஸ்தான் மண்ணில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலுக்கு அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இது கொடுங்குற்றம். இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே பகைமையை உருவாக்கும். போர் தொடங்கினால் அது யாருக்கும் சாதகமானதாக இருக்காது. போர் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.