இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி இப்படி பேச தைரியம் இருக்கிறதா? லட்டு விவகாரத்தில் குஷ்பு ஆவேசம்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் குஷ்பு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
லட்டு விவகாரம்
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஆட்சியில் திருப்பதியின் புனிதத்தை கெடுத்து விட்டனர் என்றார்.
மேலும், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் கலப்பட பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.
மேலும், திருப்பதி லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் விரதம் இருந்து வருகிறார்.
இதனிடையே, நடிகர் கார்த்தி லட்டு குறித்து பேசியதற்கு பவன் கல்யாண் எதிர் வினையாற்றி இருந்தார். பின்பு, நடிகர் கார்த்தியும் லட்டு விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் 'லட்டு பரிதாபங்கள்' என்ற வீடியோ பதிவிடப்பட்டு நீக்கப்பட்டது.
குஷ்பு ஆவேசம்
இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்பட்டது. இதில் நான் கவனித்ததெல்லாம், இந்து மதம் குறிவைக்கப்படும் போதெல்லாம், அமைதியாக கடந்து செல்லும் மனோபாவத்தைக் கொண்டிருக்குமாறு நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். என்ன நியாயம்?
ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் நான் கேட்கிறேன், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி இப்படி பேசுவதற்கு (கிண்டல்) உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை பற்றி தவறாகப் பயன்படுத்துவதை நினைத்தால் உங்கள் முதுகெலும்பு எல்லாம் நடுங்குகிறது.
மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் மதிப்பது தான். நீங்கள் இந்த விஷயத்தில் பாரபட்சமாக இருக்க முடியாது.
நான் இஸ்லாமியத்தை தொடர்ந்து பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம், ஆனால் நான் கடவுள் மீது பயபக்தியுள்ள இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு இந்துவும் கூட.. எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான்.
இந்து மதத்தை அவமதிப்பதையோ, கிண்டல் செய்வதையோ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எந்த விதமான அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளப்படாது.
கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துகிறது. பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். வெங்கடேசப் பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |