புகலிடம் கோரி போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு மகிழ்ச்சியான தகவலை வழங்கிய அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவின் கடுமையான புகலிடக் கோரிக்கை கொள்கைகளின் பொது முகமாக மாறிய இலங்கை தமிழ் குடும்பமானது நான்கு வருட போராட்டத்திற்குப் பிறகு நாட்டில் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் சிக்கலான மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு தற்போது அவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவு தங்மது குடும்பத்திற்கு நிம்மதியை அளித்துள்ளதாக பிரியா நடராஜா தெரிவித்துள்ளார். மேலும், எனது மகள்கள் இனிமேல் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக வளருவார்கள் என்றும். நானும் என் கணவரும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாழ முடியும் எனவும் பிரியா நடராஜா குறிப்பிட்டுள்ளார்.
பிரியாவும் அவரது கணவர் நடேசலிங்கமும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனி படகு பயணத்தில் அவுஸ்திரேலியா சென்றதுடன் புகலிடம் கோரினர். இவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்களை அவுஸ்திரேலிய அரசு வழங்கியது.
இந்த நிலையில் இருவரும் பில்லோவீலாவில் சந்தித்துக்கொண்டதுடன், காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோபிகா(7) மற்றும் தாருணிகா(5) என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதனிடையே, இவர்களின் குடியேற்ற விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியைப் பெறுவதற்கான வரைமுறைகள் இவர்களுக்கு இல்லையென அவுஸ்திரேலிய அரசு கூறிவிட்டது.
மட்டுமின்றி, 2018 முதல் இவர்கள் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கு பலனாக தற்போது அவுஸ்திரேலியாவின் புதிய அரசு அவர்களுக்கு விசா வழங்கியதுடன், நடேசலிங்கம் குடும்பம் தற்காலிகமாக பில்லோவீலாவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.