பிரபல தமிழ்ப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதனுக்கு மூளைச்சாவு! மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஷியாம், அருண்விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதைத்தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து லாபம் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர்களுடன் சேர்ந்து ஜனநாதனும் உண்ணாவிரதம் முன்னர் மேற்கொண்டவர் ஆவார்.
அவரின் லாபம் திரைப்படத்திலும் ஈழ பாடகி கிலியோ என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நேற்று மதியம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் வராததால் உதவியாளர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவரது உதவியாளர்கள், அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அவரின் உதவி இயக்குனர் பாலாஜி கூறுகையில், மூளைக்குசெல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது ஜனநாதன் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு மருத்துவர் வருவார் என சொல்லியிருக்கிறார்கள்.
அவர் வந்துபார்த்தப்பிறகுதான் என்ன பிரச்னை என்பது குறித்த சரியான விவரங்கள் தெரியும் என கூறியுள்ளார்.