வெளிநாட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றிய தமிழன்! என்ன செய்தார் தெரியுமா? குவியும் பாராட்டு
அமெரிக்காவில் கடும் குளிரில், ஏரி ஒன்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை தமிழக இளைஞன் உட்பட மூன்று பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தமிழகத்தின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அஞ்சன் மணி. இவர், டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவின் மகள் ஆர்த்தி கிருஷ்ணா மற்றும் மருத்துவர் மணி சாக்கோ தம்பதியரின் மகன்.
சுந்தரம் பாஸ்டனர்ஸின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி கிருஷ்ணா. சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த அஞ்சன் மணி. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்னல் எஸ்சி ஜான்சன் வணிகக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை இளநிலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அங்கு ஏரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அது குறித்து தி தமிழ் இந்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், விடுமுறை நாளன்று. வழக்கத்தைவிடவும் அன்று குளிர் குறைவாக இருந்ததால், நானும் தன் நண்பன் பிலிப்பும் சுற்றுலா சென்றோம்.
அப்போது, மீன் பிடித்துக் கொண்டிருந்த முதியவர் ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகக் சத்தம் கேட்டது. இதனால், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோம்.
அதன் படி ஏரிக்குள் இருந்த ஏணி வழியாக முதியவரை மேலே அழைத்து வந்துவிடலாம் என பிலிப் முதலில் நீருக்குள் இறங்கினார். நான் முதியவரின் கைகளை பிடித்து நீரில் இருந்து மீட்க முயன்றேன்.
ஆனால், தண்ணீருக்குள் மூழ்கி நெடு நேரமாகி விட்டதால் முதியவர் மிகவும் சோர்வடைந்துவிட்டார். பிலிப்புக்கோ ஏற்கெனவே கையில் காயம் இருந்ததால், உடல் பருமனான அந்த முதிய வரை தூக்கிச் சுமக்கும் வலு பிலிப்புக்கு இல்லை.
அவரை பிடித்து இழுக்கும் முயற்சியில் தவறி பிலிப்பும் ஏரிக்குள் விழுந்து விட்டார். இதையடுத்து, பூங்காவுக்குச் சுற்றுலா வந்திருந்த இளைஞர் அலெக்சாண்டர் சங்கும் நானும் ஏரிக்குள் குதித்தோம்.
உறைய வைக்கும் குளிர் நீரிலும் எப்படியாவது முதியவரைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே இருந்தது. நானும் அலெக்சாண்ட ரும் முதியவரின் தோளை பிடித்து அவரை மீட்டுக் கரை சேர்த்தோம்.
அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்களின் உதவியோடு முதியவரை காப்பாற்ற முடிந்தது. காவல் துறையினரும் வந்து எங்களைக் கம்பளியால் போர்த்தி அழைத்துச் சென்று கைகுலுக்கி வாழ்த்தினார்கள்.
முகம் தெரியாத மனிதர் என்றாலும் ஒரு உயிரைக் காப்பாற்றும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது மனநிறைவைத் தருகிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த செயலைக் கண்டு இணையவாசிகள் பலரும் பாராட்டு வருகின்றனர்.
