புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கிய சீமான்: வெளியிட்ட முதல் பதிவு என்ன தெரியுமா?
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சீமான் டுவிட்டர் கணக்கு முடக்கம்
மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார்.
இதனையடுத்து, நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் டுவிட்டர் கணக்கு திடீரென்று முடக்கப்பட்டது.
அதேபோல் அவருடைய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு டுவிட்டர் நிறுவனம், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்திருந்தது.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல என்று பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சீமான்
இந்நிலையில், கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் 'செந்தமிழன் சீமான்' என்ற புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கிய சீமான், அதில் முதல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கொன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும்.
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவு செய்து துணை நிற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.