பல துறைகளில் கால் பதித்தவர்.. பல மொழிகளை பேசுபவர்.., தற்போது தமிழக மருத்துவத்துறை செயலாளர்: யார் அவர்?
தமிழகத்தில் புதிய மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் இந்த சுப்ரியா சாஹு ஐஏஎஸ்?
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக பதவி வகித்த நிலையில், தமிழகத்தின் புதிய மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, ககன்தீப் சிங் பேடி இந்த பதவியில் இருந்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரியா சாஹு 1991 -ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர்.
தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். இவர், நில வருவாய் மேலாண் துறையில் கூடுதல் ஆட்சியராக தனது பணியை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு துறை இயக்குநர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கூடுதல் இயக்குநர், நீலகிரி மாவட்ட ஆட்சியர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.
இதன் பிறகு இந்திய அரசு இவரை அழைத்துக் கொண்டதால் கடந்த 2009 -ம் ஆண்டு முதல் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இயக்குநராக பதவி வகித்தார்.
பின்னர் அதே துறையில் இணை செயலாளர், பொது இயக்குநர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.
பின்னர், கடந்த 2019 -ம் ஆண்டு தமிழக அரசு அழைத்துக் கொண்டதால் தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் தொழில்துறை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் முதன்மை செயலாளராக இருந்தார்.
பின்னர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தமிழகத்தின் மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |