தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்.. இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்கள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு பொருட்களை அனுப்ப, நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மற்றோரு புறம் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு தமிழக மக்கள் சார்பில் வழங்கப்பட உள்ள பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பொருட்களின் மீது தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என எழுதப்பட்டுள்ளது.
மே 22ஆம் திகதிக்கு பிறகு பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அரசு, சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்ப, 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் இருந்து டன் கணக்கிலான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.