கடந்த வாரம் நிச்சயதார்த்தம் - தென்கொரியாவில் ரோபோ மோதி தமிழ்நாடு இளைஞர் உயிரிழப்பு
last week engagement tamilnadu youth dies hit by robot in south korea: திருமண நிச்சயதார்த்தமாகி ஒரு வாரமே ஆன நிலையில், தென்கொரியாவில் ரோபோ மோதி தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ரோபோ மோதி தமிழ்நாடு இளைஞர் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு அருகே உள்ள கண்ணுகுடி வடக்குத் தெருவை சேர்ந்தவர் 32 வயதான சுதர்ஷன்.
தென் கொரியாவின் சியோராவில் உள்ள ஒரு கார் உதிரிபாகத் தொழிற்சாலையில், கடந்த 3 ஆண்டுகளாக சுதர்சன் பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு சுதர்ஷன் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது, தானியங்கி ரோபோ இயந்திரம் அவரது மார்பில் பலமாக மோதியுள்ளது.
இதனை கவனித்த அவரது சக ஊழியர்கள் சுதர்ஷனை மீட்டு, தொழிற்சாலையில் இருந்த மருத்துவரிடம் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர செய்தியை கேட்ட சுதர்சனின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சுதர்சனின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.
சியோலில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தென்கொரியத் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் சுதர்ஷனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழந்த சுதர்சனுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இன்னும் சில வாரங்களில் அவர் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு திரும்ப இருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.