லண்டனில் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட தமிழ் மாணவர் மரணம்: சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினர்
உயர் கல்விக்காக பிரித்தானியா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த வாரம் கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இங்கிலாந்து பொலிசார் இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இல்லை என கூறியுள்ள நிலையில், அந்த மாணவரின் குடும்பத்தினரோ, அவரது மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறுகின்றனர்.
உயர் கல்வி கற்பதற்காக சென்ற மாணவர்
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஜீவந்த் சிவகுமார் (25). பர்மிங்காமிலுள்ள ஆஸ்டன் பல்கலையில் இணைந்து பட்ட மேற்படிப்பு படித்துவந்தார் அவர்.
இந்நிலையில், சென்ற வாரம், அதாவது ஜூன் மாதம் 21ஆம் திகதி, பர்மிங்காமிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து அவரை மீட்டதாக தெரிவித்த பொலிசார், அவசர உதவிக்குழுவினரின் முதலுதவி சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் சகோதரர்
இந்தியாவிலிருக்கும் ஜீவந்தின் தம்பியான ரோஹன், ஜீவந்தின் மரணத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காரணம், ஒருநாள் கூட தவறாமல் குடும்பத்தினருடன் மொபைலில் பேசுவாராம் ஜீவந்த். ஆனால், சம்பவம் நடந்த அன்று நூலகத்துக்குச் செல்வதாக தன் நண்பர்களிடம் கூறிவிட்டு சென்ற ஜீவந்த், பின்னர், மீண்டும் அவர்களை அழைத்து தான் வர நேரமாகும் என்றும், இரவு உணவுக்கு வரமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அதற்குப் பின் அவரது நண்பர்கள் அவரை மொபைலில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லை என்றும், பிறகு அவரது மொபைலை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விசாரணைக்குப் பிறகே ஜீவந்தின் உடல் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று தெரியவந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |