இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல! துணையாக நாம் இருக்கிறோம்... தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள சிறப்புமிக்க முக்கிய அறிவிப்பு
இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை முதலமைச்சர் இன்று வெளியிட்டார். ஏற்கனவே நேற்று தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில், இலங்கை தமிழர்கள் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது, இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
“இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமாக இலங்கை அகதிகள் முகாம் என்பது இனி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/zC8ymiQubB
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 28, 2021
இந்த அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தமிழர் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்றைய சட்டமன்ற தொடரின் போது இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்ற சொல் மாற்றப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின்.
இது குறித்து அவர் பேசுகையில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்று கூறாமல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று இன்று முதல் அழைக்கப்படும்!
அவர்கள் அனாதைகள் அல்ல; நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக! எனவே, அந்த உணர்வோடு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.