முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு மாளிகையில் தீ விபத்து: உணவகத்தை சூழ்ந்த புகைமூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்
இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார்.
நேற்று, இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை சந்தித்தார். மேலும் மாலை 6.30 மணிக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து பேசினார்.

அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்தித்து ஆதரவுக்கான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த முக்கிய சந்திப்புகளை முடித்து விட்டு முதலமைச்சர் விஜய் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு ஓய்வெடுக்க திரும்பினார்.
தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
இந்நிலையில், மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ளும் 11வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு இல்லத்தில் இருந்து காலையில் முதலமைச்சர் விஜய் புறப்பட்டு சென்றார்.
அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
புகைமூட்டம் வேகமாக பரவியதையடுத்து அங்கிருந்தவர்களை பொலிஸார் பத்திரமாக வெளியேற்றினர்.
அத்துடன் உடனடியாக தீயும் அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |