திருமதி அழகி போட்டியில் பங்கேற்கும் தமிழக மாடல்! யார் இந்த சாதனை பெண்?
அமெரிக்கா, டென்னிசி மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கவுள்ளார்.
திருமதி உலக அழகி போட்டி
70 நாடுகளைச் சேர்ந்த திருமணமான பெண்கள் பங்கேற்கும் இந்த திருமதி உலக அழகி போட்டி ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 22 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியானது, திருமணமான பெண்களின் சாதனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் போட்டியாகும்.
சுற்றுகள்
திருமதி உலக அழகி போட்டியில் பல சுற்றுகள் உள்ளன. தீவிரமான மற்றும் விளையாட்டு சுற்றுகள் உள்ளன.
உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று சுற்றுகள் நடைபெறும்.
25% மதிப்பெண்கள் கொண்ட உடற் தகுதிச் சுற்றில் நம் உடல் பராமரிப்பு, தன்னம்பிக்கை மனத்திடம் ஆகியவை பார்க்கப்படும்.
பின்னர், 50% மதிப்பெண்கள் கொண்ட நேர்காணல் சுற்றில் மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 5 நிமிடம் வரை பதில் சொல்ல வேண்டும்.
இதனையடுத்து, ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்கார சுற்று நடைபெறும். இது, கணவருடன் பெண்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு கணவர் எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று.
இதை தவிர சில விளையாட்டு சுற்றுகளும் நடைபெறும். பாத் பாம்ப் மேக்கிங், அக்ஸ் த்ரோயிங் , சோப் மேக்கிங், பேஸ்பால், வைன் இன் வெட்ஜெஸ் என்கிற ஜாலியான சுற்றுக்களும் உண்டு. இவற்றுக்கு மதிப்பெண் கிடையாது.
பின்பு, மேற்கண்ட சுற்றுகளில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை தேர்வு செய்ய வேண்டும்.
அந்த பிரச்னைகள் குறித்து அவர்கள் 30 நொடிகளில் பேச வேண்டும். அப்போது, அதிலிருந்து கேள்வி எழுப்பப்படும். அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் பதில் சொல்ல வேண்டும். இதிலிருந்து 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதி போட்டி நடைபெறும்.
பிளாரன்ஸ் ஹெலன் நளினி
இந்த இறுதி போட்டியில் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருப்பதாக ஹெலன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி Ms.International World People's Choice Winner 2022 என்ற பட்டம் வென்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஹெலன் கூறியுள்ளார். தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, தியானம் மற்றும் நேர்மறை சிந்தனைகளை கொண்ட மனநிலையை பராமரிப்பதாக கூறியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய கொரோனா பிளாரன்ஸ் ஹெலன் நளினியையும் விடவில்லை. அப்போது அவர், தன்னைக் காப்பாற்றியது யோகாவும், நம்பிக்கையும் தான் எனக் கூறியுள்ளார். இந்த காரணத்தினால் தான் போட்டியையும் தாண்டி உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பது முக்கியம் எனக் கூறுகிறார்.
இளநிலை பட்டமாக லைஃப் சயின்ஸ், முதுநிலை பட்டமாக பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷன், எம்பிஏ மார்க்கெட்டிங் அண்ட் ஹெச்.ஆர், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஏ ஆங்கில இலக்கியம் ஆகிவற்றை ஹெலன் படித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷனில் முனைவர் பட்டம், உளவியலில் முதுநிலை முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். உளவியலில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கி உள்ளார். லைப் ஸ்கில் பயிற்சியாளர், யோகா பயிற்சியாளர், ஹோல்னஸ் அன்ட் வெல்னஸ் அமைப்பின் பயிற்சியாளர் எனப் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
வுமன் பேஸ் ஆப் தி இயர், பாக்ஸ் ஸ்டோரியின் 50 ஆளுமை செலுத்தும் பெண்கள் விருது, சுகாதாரத் துறையில் ஈடுபடும் 50 பெண்கள் விருது, ஃபெமினாவின் தென் இந்திய பெண் விருது, சிறந்த கல்வியாளர், உளவியலாளர், தொழில் வல்லுநர், மாற்றத்தை விதைப்பவர், சிறந்த பெண் தொழில் வல்லுநர், அழகும், அறிவும் கொண்ட பெண் விருது, கௌரவ புரஸ்கார் விருது என பல விருதுகளை குவித்துள்ளார் ஹெலன்.
இவருடைய லட்சியம் என்னவென்றால், குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான். அண்மையில் கூட, உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |