ஒலிம்பிக்கில் சாதித்த தமிழனின் அவல நிலை! பட்டா கொடுத்துவிட்டு... மனை கொடுக்காமல் அலைகழிக்கும் துயரம்
ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த தமிழனுக்கு பட்டா கொடுக்கப்பட்ட நிலையில், நிலம் இன்னும் வழங்கப்படாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செளந்தர்ராஜன். இவருக்கு ஆரோக்கிய ராஜீவ் என்ற மகன் உள்ளார்.
ராஜீவ் சிறுவயது முதலே தடகளத்தில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்ற இவர், தற்போது நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் , முந்தைய ரியோ ஒலிம்பிக் என 2 ஒலிம்பிக் போட்டிகளிலும் 4× 400 தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காக ஓடியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆரோக்கிய ராஜுவ் அடங்கிய இந்திய அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஓரிரு வினாடிகளில் இழந்தாலும் ஆசிய சாதனைப் படைத்து, பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆசிய, காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச தடகளப் போட்டிகளில் ஆரோக்கிய ராஜீவ் பதக்கம் வென்று, இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக, மத்திய அரசின் அர்ஜூனா விருதையும் இவர் வென்றுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதன் காரணமாக, தமிழக அரசு இவருக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கியது.
அபோது, ஆரோக்கிய ராஜீவின் தந்தை வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு வழுதியூர் கிராமத்தில் அரசு இலவச மனை வழங்கக் கோரி, அரசுக்கு மனு அளித்தார்.
இதன் காரணமாக, அவர்களுக்கு லால்குடி அருகே அரியூரில் 2 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. அதற்கான பட்டாவும் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை நிலத்தை ஒப்படைக்கவில்லை.
கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி, முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை கோரிக்கை மனு அனுப்பியும் பலன் இல்லை. இது குறித்து அவர் கூறுகையில், பட்டா கிடைத்துவிட்டது, ஆனால் நிலம் கிடைக்கவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும், இது வருவாய் துரை வட்டாரம் கூறுகையில், ஆரோக்கிய ராஜீவ் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனை உள்ள பகுதி, முட்புதராக இருக்கிறது.
இதை அகற்றி, மேலும் சிலருக்கும் இங்கு வீட்டு மனை வழங்கப்படவுள்ளது என்று காரணம் கூறுகின்றனர்.