குதிரைக்காரர் கூறியவுடன் தப்பியோடினோம்: பஹல்காமில் உயிர்தப்பிய 6 தமிழர்கள்
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலின்போது, சுற்றுலா சென்றிருந்த 6 தமிழர்கள் உயிர்தப்பிக்க குதிரைக்காரர் ஒருவர் உதவியதாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சத்தம்
தமிழ்நாட்டின் செஞ்சியைச் சேர்ந்த சையத் உஸ்மான் என்பவர், தனது நண்பர்கள் 5 பேருடன் காஷ்மீரின் பஹல்காமிற்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.
அவர்கள் பைசரனை சுற்றிப்பார்க்க சென்றபோது துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. ஆனால், அது ஏதோ வெடிச்சத்தம் என அவர்கள் நினைத்துள்ளனர்.
அப்போது அவர்களை அழைத்துச் சென்றிருந்த குதிரைக்காரர் ஒருவர், "உங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடிவிடுங்கள்" என்று கூற சுதாரித்துக்கொண்டு தமிழர்கள் ஆறு பேரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
வேகமாக ஓடிவந்துவிட்டோம்
இதுகுறித்து உஸ்மான் கூறுகையில், "சனிக்கிழமை முதல் நாங்கள் அங்கே சுற்றுலாவுக்குச் சென்றோம். முதலில் குல்மர்க், பிறகு ஸ்ரீநகர். ஞாயிற்றுக்கிழமை நாங்கள் அனந்த்நாக் சென்றோம். செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நாங்கள் பஹல்காமுக்கு சென்றோம்.
பைசரனில் நாங்கள் பனியைப் பார்க்க விரும்பினோம். அது அங்கிருந்து பக்கமாக இருந்தது. அங்கே கொஞ்சம் நேரம் செலவிட்ட பிறகு, 2 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தோம். நுழைவு மற்றும் வெளியேறும் வழி ஒரே இடத்தில்தான் அமைந்திருந்தது.
குதிரைக்காரர் ஒரு குறுகலான வழியில் எங்களை அழைத்து வந்தார். அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டின் சத்தம் கேட்டது. என் இரண்டு நண்பர்கள் அப்போது குதிரையின் மேலே அமர்ந்திருந்தனர்.
ஆரம்பத்தில் நாங்கள் வெடிச்சத்தம் என்று நினைத்தோம். ஆனால், மக்கள் கூச்சலிடவும் நிலைமை என்னவென்று புரிந்தது. எங்களை அழைத்துச் சென்ற நபர், தப்பித்து ஓடிவிடுங்கள் என்று கூறினார். நாங்கள் அங்கிருந்து வேகமாக ஓடிவந்துவிட்டோம்" என்றார்.
இதனைத் தொடர்ந்து ஆறு பேரும் பத்திரமாக விமான நிலையம் திரும்பியதாக செய்தி தெரிவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |