பஹல்காம் தாக்குதலால் போர் பதற்றம்; இந்தியா - பாகிஸ்தானின் ராணுவ பலம் என்ன?
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ பலம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இதனையடுத்து, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை நேற்று எடுத்தது.
இதற்கு பதிலடியாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க தடை விதிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், அனைத்து வகையான வர்த்தக உறவுகளை முறிவுப்பதாகவும் அறிவித்துள்ளது.
சிந்து நதி நீரை நிறுத்தியதை போராக கருதுகிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மேலும், இரு நாடுகளும் ஏவுகணை சோதனை நடத்துவது, முப்படைகளை தயார் நிலையில் வைப்பது என போர் சூழலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ பலம் குறித்து பார்க்கலாம்.
ராணுவ பட்ஜெட்
உலகின் சக்திவாய்ந்த இராணுவங்களின் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 9 வது இடத்தில் உள்ளது.
இந்தியா தனது பாதுகாப்பிற்கு பட்ஜெட்டில் 81 பில்லியன் டொலர் ஒதுக்குகிறது. பாகிஸ்தான் தனது பாதுகாப்பிற்கு பட்ஜெட்டில் 11 பில்லியன் டொலர் ஒதுக்குகிறது.
தரைப்படை
இந்திய ராணுவத்தில் 14.80 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இதில், 12.30 லட்சம் வீரர்கள் தரைப்படையிலும், 1,39,576 வீரர்கள் விமானப்படையிலும், 67,228 வீரர்கள் கடற்படையிலும் உள்ளனர்.
கூடுதலாக, ரிசர்வ் படையில் 11.5 லட்சம் வீரர்களும், துணை ராணுவப் படைகளில் 13 லட்சம் வீரர்களும் உள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தில், 5 லட்சம் துணை ராணுவப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 1.2 மில்லியன் வீரர்கள் உள்ளனர்.
இந்திய தரைப்படையில், 4,201 டாங்கிகளும், 148,050 கவச வாகனங்களும், 4,204 பீரங்கிகளும் உள்ளது.
பாகிஸ்தான் தரைப்படையில், 3,742 டாங்கிகள், 50,523 கவச வாகனங்களும், 752 சுய இயக்கப்படும் பீரங்கி அலகுகளும், 692 மொபைல் ராக்கெட் லாஞ்சர்களும் உள்ளன.
விமானப்படை
இந்தியா விமான படையில், 513 போர் விமானங்கள் உட்பட 2,229 விமானங்கள் உள்ளது. ரஃபேல், தேஜாஸ், மிராஜ் 2000, மிக்-29, சுகோய் போன்ற நவீன போர் விமானங்களை இந்தியா வைத்துள்ளது.
மேலும், 899 ஹெலிகாப்டர்களையும், 560 போக்குவரத்து விமானங்கள், 6 வான்வழி டேங்கர்களையும் வைத்துள்ளது. பிரம்மோஸ், ருத்ரம், அஸ்ட்ரா, நிர்பய், ஆகாஷ் போன்ற ஏவுகணைகளை வைத்துள்ளது.
பாகிஸ்தானிடம் 328 போர் விமானங்கள் உட்பட 1,399 விமானங்கள் உள்ளது. F-16 உட்பட நவீன போர் விமானங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது.
மேலும், 373 ஹெலிகாப்டர்கள். 60 போக்குவரத்து விமானங்கள், 4 வான்வழி டேங்கர்களையும் வைத்துள்ளது.
கடற்படை
இந்திய கடற்படையில், 293 போர் கப்பல்கள் உள்ளது. மேலும், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஐஎன்எஸ் விக்ராந்த் என 2 விமான தாங்கி கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளது.
பாகிஸ்தான் கடற்படையில், 114 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளது. ஆனால் பாகிஸ்தானிடம் விமானம் தாங்கி கப்பல்கள் இல்லை.
அணு ஆயுதங்கள்
இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அணு ஆயுதங்கள் பயன்படுவது இரு நாடுகளுக்கும் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதால், அணு ஆயுதங்களை இரு நாடுகளும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
பாகிஸ்தானை விட இந்தியராணுவம் அனைத்து பிரிவுகளிலும் பலம் வாய்ந்ததாக உள்ளது. பாகிஸ்தானிற்கு சீனாவுடனான நெருங்கிய இராணுவ உறவுகள் பலமளிக்கலாம். அதேவேளையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்திய ஆதரவு நிலையே எடுக்கும் என்பது இந்தியாவிற்கு கூடுதல் பலம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |