நாஜி காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டு ஓவியம்: டேட் பிரிட்டனின் வரலாற்று முடிவு!
நாஜி காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஓவியத்தை யூத கலெக்டரின் வாரிசுகளுக்கு திருப்பி அளிக்க டேட் பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட ஓவியம்
வரலாற்று சிறப்புமிக்க 17ஆம் நூற்றாண்டு ஓவியமான ஹென்றி கிப்ஸ் வரைந்த "ஏனியஸ் மற்றும் அவரது குடும்பம் எரியும் ட்ரோயிலிருந்து தப்பித்தல்" (Aeneas And His Family Fleeing Burning Troy), நாஜி காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த ஓவியத்தை தற்போது பெல்ஜிய யூத கலை சேகரிப்பாளர் சாமுவேல் ஹார்ட்வெல்டின் (Samuel Hartveld) சந்ததியினருக்கு மீண்டும் ஒப்படைக்க டேட் பிரிட்டன் (Tate Britain) அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.
வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்
இன ரீதியான துன்புறுத்தலின் செயலாக இந்த ஓவியம் கொள்ளையடிக்கப்பட்டதாக ஸ்போலியேஷன் ஆலோசனை குழுவின் அறிக்கை கூறுகிறது.
ஜேர்மன் ஆக்கிரமிப்பின்போது, சாமுவேல் ஹார்ட்வெல்டின் ஆண்ட்வெர்ப் (Antwerp) இல்லத்திலிருந்து இந்த கலை பொக்கிஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1940 மே மாதத்தில், சாமுவேலும் அவரது மனைவியும் பெல்ஜியத்தை விட்டு வெளியேறியுள்ளனர், அப்போது அவர்களின் விலைமதிப்பற்ற கலை சேகரிப்பை விட்டுச் சென்றுள்ளனர்.
ஐரோப்பாவில் தொடரும் தேடல்
போரில் உயிர் பிழைத்தாலும், ஹார்ட்வெல்ட் தனது கலைப் பொருட்களை மீட்க முடியவில்லை. அவரது பல ஓவியங்கள் ஐரோப்பா முழுவதும் உள்ள பல்வேறு காட்சியகங்களில் சிதறிக்கிடப்பதாக நம்பப்படுகிறது.
ஹார்ட்வெல்டின் சந்ததியினரால் நிறுவப்பட்ட சோனியா க்ளீன் அறக்கட்டளை (Sonia Klein Trust), 2024 மே மாதத்தில் இந்த ஓவியத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை முன்வைத்தது.
இந்நிலையில், இந்த கலைப் பொருளை திரும்ப ஒப்படைக்கும் முடிவை இங்கிலாந்து அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |