தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்
தான் படிப்பு சொல்லிக் கொடுத்து, படிக்க வைத்த ஒரு பெண், தனக்கு அதிகாரியாக வந்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று காவலர் கூறியுள்ளார்.
குரு - சிஷ்யை
இந்திய மாநிலமான தெலங்கானா, விகாராபாத் மாவட்டம், சவுத்ரிகூடா கிராமத்தை சேர்ந்தவர் லால்யா நாயக். இவர் எம்.ஏ. பி.எட் வரை படித்துள்ளார். இதையடுத்து, விகாராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
அப்போது, அந்த கல்லூரியில் ஏழை மாணவியான ஜபீனா பேகம் படித்தார். அவருக்கு தனது ஊதியத்தில் இருந்து கட்டணம் கட்டி லால்யா நாயக் படிக்க வைத்தார்.
அப்போது, ஜபீனா பேகத்தின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய நினைத்த போதும் அதனை தடுத்து நிறுத்தி படிக்க வைத்தார்.
பின்னர், கொரோனா காலத்தில் லால்யா நாயக்கிற்கு வேலை இல்லாததால் காவலர் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது மொய்னாபாத் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, படிப்பை முடித்த ஜபீனா பேகம் 2024-ல் எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர், ஓராண்டு பயிற்சிக்கு பிறகு மொய்னாபாத் காவல் நிலையத்தில் பணி நியமனம் பெற்றார்.
அப்போது, எஸ்ஐ சீருடையில் வந்த ஜபீனா பேகத்தை பார்த்து லால்யா நாயக் இன்ப அதிர்ச்சியும், பெருமையும் அடைந்தார். பின்னர், அவருக்கு சல்யூட் அடித்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றார்.
தான் படிப்பு சொல்லிக் கொடுத்து, படிக்க வைத்த ஒரு பெண் தனக்கு அதிகாரியாக வந்ததை பெருமையாக கருதுவதாக லால்யா நாயக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |