அப்பாவிற்கு அரசு அதிகாரியாக பார்க்க ஆசை., இன்று இந்திய கிரிக்கெட் அணியின் ஹீரோ! யார் இவர்?
தந்தையின் எதிர்ப்பு, குடும்பத்தின் பொருளாதாரக் கஷ்டம், அக்கம்பக்கத்தினரின் கிண்டல் வார்த்தைகள் என அனைத்தையும் எதிர்கொண்ட பீகார் மாநிலம் ரோட்டஸ் மாவட்டத்தில் உள்ள பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் தீப், இந்தியாவிற்கு விளையாட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை தற்போது நனவாக்கியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆகாஷ், வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.
ஆகாஷின் அப்பா ஆகாஷை அரசு அதிகாரியாக பார்க்க விரும்பினார். ஆனால் ஆகாஷுக்கு கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. அவரது அம்மாவும் அவருக்கு ஆதரவாக நின்றார்.
தந்தையின் எதிர்ப்பையும் மீறி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஆகாஷ், தொடக்கத்தில் பல இன்னல்களைச் சந்தித்தார்.
ஆகாஷ் தீப் கடந்த 2010-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு வேலை தேடி சென்றார். வேலை செய்யும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடி தனது கனவைத் துரத்திக்கொண்டிருந்தார்.
ஆனால் 2015-இல் சில மாதங்களில் தந்தையையும் மூத்த சகோதரனையும் இழந்த ஆகாஷ், முழு குடும்பத்தின் பொறுப்பையும் சுமக்க ஆரம்பித்தார். இதற்காக அவர் 3 ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார்.
ஆனால் கிரிக்கெட் மீதான தனது ஆசையை கைவிடாமல் மீண்டும் துர்காபூரில் உள்ள உள்ளூர் கிளப்பில் விளையாடினார்.
23 வயதுக்குட்பட்ட பெங்கால் அணிக்காக விளையாடிய பிறகு, ரஞ்சி அணியிலும் இணைந்தார்.
2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆர்சிபி அணிக்கு தேர்வாகி கவனத்தை ஈர்த்துள்ள அவருக்கு தற்போது இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணிக்காக அறிமுகமாகி முதல் டெஸ்டில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப், "டெஸ்ட் தொப்பியை பெறுவது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். ஒரு வருடத்தில் எனது தந்தையையும் சகோதரனையும் இழந்தேன். எனது கிரிக்கெட் பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது. இதுவரையிலான எனது கடினமான பயணத்தின் பின்னணியில் எனது குடும்பம் பெரும் பங்கு வகித்துள்ளது" என்றார்.
"பீகாரில் கிரிக்கெட் விளையாடுவது குற்றம் போன்றது. எனது நண்பர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆகாஷுடன் சேர்க்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். ஏனென்றால் படிப்பை விட கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துவேன் என்று எனது நண்பர்களின் பெற்றோர் கருதினர். அதனால் தான் நான் ரகசியமாக கிரிக்கெட் விளையாடினேன்" என்று ஆகாஷ் தீப் கூறினார்.
ராஞ்சி டெஸ்டில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆகாஷ் தீப், இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். ஆகாஷ் தீப் 19 ஓவர்கள் வீசி 83 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Akash Deep, Akash Deep success story, inspirational story of Akash Deep, Team India bowler Akash Deep