போருக்குச் செல்லும் தந்தையை மீண்டும் பார்ப்போமா என்பதை அறியாமல் விடைகொடுக்கும் பிள்ளைகள்: நெஞ்சை நெகிழவைக்கும் புகைப்படங்கள்
உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவுக்குக் காரணமாகியிருக்கிறார் ரஷ்ய அதிபர் புடின்.
தாய்நாட்டைக் காக்கும் அதே நேரத்தில், தந்தையாக, கணவனாக, தனது குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக, தங்கள் மனைவி பிள்ளைகளை வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைத்துவிட்டு, போரிடப் புறப்படுகிறார்கள் உக்ரைன் ஆண்கள்.
அவ்வகையில், தன் இரண்டு பிள்ளைகளுக்கும், அன்பு மனைவிக்கும் பிரியாவிடை கொடுத்து அனுப்பும் ஒரு உக்ரைனியரைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை நெகிழவைத்துள்ளன.
மத்திய உக்ரைனிலுள்ள Poltava என்ற இடத்தைச் சேர்ந்தவர் Roman Overchenko (32). சேல்ஸ் மேனேஜரான Roman, தன் நாட்டுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய படையினரை எதிர்கொள்வதற்காக ஆயுதம் ஏந்த முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், மற்ற ஆண்களைப் போலவே, தான் தன் தாய்நாட்டுக்காக போரிட முடிவு செய்துள்ள அதே நேரத்தில், தன் மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாப்பான நாடு ஒன்றிற்கு அனுப்பிவைக்க முடிவு செய்கிறார் Roman.
ஆனால், இனி பிள்ளைகளைப் பார்க்கமுடியுமா என்பது தெரியாத நிலையில், பிள்ளைகளுக்கு விடைகொடுப்பது எளிதா என்ன?
ஆரு வயது மகள் Dasha, அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, போகாதீர்கள் அப்பா என்கிறாள். அழுகை முட்டிக்கொண்டு வருகிறது Romanக்கு.
அந்த வழியே நடந்து செல்வோர் இந்தக் காட்சியைக் கண்டு ஒரு கணம் திகைத்து நிற்கிறார்கள்.
அடுத்து இரண்டு வயது மகன் Margoவைக் கட்டிக்கொள்ள, அப்பா ஏன் அழுகிறார் என்பது புரியாத அந்தக் குழந்தை விழிக்கிறது. அதைப் பார்த்து Romanஇன் மனைவி Evheniya (30) தான் கலங்கினால் பிள்ளைகள் பயப்படுவார்களே என்று தன்னை அடக்கிக்கொண்டு குனிந்து கண்ணீரை மறைத்துக்கொள்ள முயல்கிறார், ஆனால், கண்ணீர் கண்ணுக்குள் நிற்காமல் பீறிடுகிறது.
மீண்டும் அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு விட மறுக்கிறாள் Dasha. ஆனாலும், வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு பின்னோக்கி அடி எடுத்துவைக்கிறார் Roman. அடுத்து, காதல் மனைவிக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம்.
இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்கிறார்கள். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் பிள்ளைகளுடன் தன் தந்தையின் காரில் ஏறுகிறார் Romanஇன் மனைவி Evheniya.
மனைவி பிள்ளைகளுடன் கார் புறப்பட, வலுக்கட்டாயமாக முகத்தில் புன்னகை ஒன்றை வரவழைத்துக்கொண்டு குடும்பத்தினரைப் பார்த்து கையசைக்கிறார் Roman.
கார் அங்கிருந்து மறையும் வரை நின்றுவிட்டு, நாட்டுக்காக போரிடப் புறப்படுகிறார் அவர்.
இது மிகவும் வேதனையை அளிக்கிறது என்று கூறும் Roman, கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கிறார், வார்த்தைகள் தடுமாறுகிறது. என்றாலும் தன்னைத் தேற்றிக்கொண்டு, என் குடும்பத்தை மீண்டும் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது, ஆனால், அவர்கள் இங்கிருந்தால் இந்த போரால் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் அதைவிட மோசமானது என்கிறார் அவர்.
இருந்தாலும், என் நாட்டை யாரும் எடுத்துக்கொள்ளவிடமாட்டேன் என்று கூறும் Roman, சட்டென தனது காரில் ஏறி, தாய்நாட்டுக்காக கடமையாற்ற புறப்படுகிறார். அவரது கார் வேகமாக செல்கிறது.
அதற்கு எதிர் திசையில், Romanஇன் குடும்பத்தினரைப் போலவே ஏராளமானோர் எல்லையை நோக்கி நடக்கிறார்கள்!