ஒரே வகுப்பு மாணவர்கள்... நொறுங்க வைக்கும் ஒற்றைப் புகைப்படம்: டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டின் கோர பின்னணி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ராப் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்கள் 19 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
குறித்த மாணவர்கள் தொடர்பில் குழு புகைப்படம் ஒன்று வெளியாகி, பார்வையாளர்களை மொத்தமாக நொறுங்க வைத்துள்ளது.
தொடர்புடைய புகைப்படத்தில் 17 மாணவர்களில் 11 பேர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பத்தொன்பது மாணவர்களும் அவர்களின் இரு ஆசிரியர்களும் 18 வயது துப்பாக்கிதாரியான சால்வடார் ராமோஸ் என்பவரால் கொல்லப்பட்டனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு தான் சால்வடார் ராமோஸ் சட்டப்பூர்வமாக துப்பாக்கியை வாங்கியுள்ளார். 2012ல் சாண்டி ஹூக் பாடசாலையில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னர் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய சம்பவம் இதுவென கூறப்படுகிறது.
கனெக்டிகட் பகுதியில் அமைந்துள்ள சாண்டி ஹூக் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் இருபது குழந்தைகளும் ஆறு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
ராப் தொடக்கப்பள்ளியில் அதிர்ஷ்டவசமக உயிர் தப்பிய நான்காவது வகுப்பு மாணவர் ஒருவர், அந்த துப்பாக்கிதாரி தடாலென வகுப்புக்குள் புகுந்து, இது சாகும் நேரம் என அலறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாணவனும் சக மாணவர்கள் நால்வர் என ஐவரும் மேஜை ஒன்றின் கீழ் ஒளிந்துகொண்டு உயிர் தப்பியுள்ளனர்.
இதனிடையே, ராமோஸின் தாயார் அட்ரியானா ரெய்ஸ் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்காகவும், அந்த அப்பாவி குழந்தைகள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமது மகன் தனிமை விரும்பி என குறிப்பிட்டுள்ள ரெய்ஸ், அவனுக்கு தவறான நண்பர்களும் இல்லை என்பதுடன், தமது மகனிடம் தாம் ஒருபோதும் வெறுப்பை காட்டியதில்லை என்றார்.
ராமோஸ் போதை மருந்து பழக்கம் கொண்டவர் அல்ல எனவும் ரெய்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாட்டியான செலியா கோன்சாலஸ் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பாடசாலை நோக்கி ராமோஸ் விரைந்ததாக கூறப்படுகிறது.
செலியா கோன்சாலஸ் முகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மட்டுமின்றி, படுகொலை சம்பவத்தில் ஈடுபடும் முன்னர் ராமோஸ், தொலைபேசி கட்டணத்தை யார் செலுத்துவது என்று பாட்டியுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.