பட்டப்பகலில் காரைக் கடத்த முயன்ற சிறுமிகள்... தப்ப போராடிய வெளிநாட்டவரான சாரதிக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவில் 13 மற்றும் 15 வயதேயான இரண்டு சிறுமிகள், பட்டப்பகலில் கார் ஒன்றை அதை செலுத்திக்கொண்டிருந்த சாரதியிடமிருந்து கடத்த முயன்றுள்ளார்கள்.
உபேர் ஈட்ஸ் நிறுவனத்துக்காக கார் ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த Mohammad Anwar (66). அப்போது, 13 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகள் அவரது காரில் ஏறியிருக்கிறார்கள்.
திடீரென, டேஸர் என்னும் மின்சாரம் கொடுக்கும் கருவியால் Anwarஐத் தாக்கி காரை அவரிடமிருந்து திருட முயன்றுள்ளார்கள் அந்த சிறுமிகள்.
Anwar அவர்களுடன் போராட, போராட்டத்தில் சீறிப்பாய்ந்த கார் மற்றொரு காருடன் மோதி கவிழ்ந்துள்ளது. காரிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் Anwar.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவர்.
இதற்கிடையில், நடப்பதைக் கண்ட தேசிய பாதுகப்புப் படையைச் சேர்ந்த சிலர், அந்த சிறுமிகளை தப்ப விடாமல் காரை சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.
பொலிசார் வந்து அந்த சிறுமிகளை கைது செய்தபிறகே அவர்கள் அங்கிருந்து நகர்ந்திருக்கிறார்கள்.
அந்த சிறுமிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தவரான Anwar, தனது மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகளுக்காக இந்த வயதிலும் வேலை செய்துவந்த நிலையில், அந்த சிறுமிகளால் அவர்களது குடும்பம் அநாதரவாக விடப்பட்டுள்ளது.


