தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்றாவது நாள்... 13 வயது சிறுவன் தொடர்பில் கதறும் குடும்பம்
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் தூக்கத்தில் மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தின் ஜில்வாக்கி பகுதியில் அமைந்துள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து ஜூன் 13ம் திகதி Jacob Clynick என்ற 13 வயது சிறுவன் தமது இரண்டாவது டோஸ் பைஸர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு, ஜூன் 15ம் திகதி வயிற்று வலியுடன் சோர்வு மற்றும் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நள்ளிரவு தாண்டி, தூக்கத்தில் இருந்த சிறுவன் பின்னர் எழவே இல்லை என சிறுவனின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உடற்கூராய்வுக்கு பின்னர், மாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் பெடரல் அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் தடுப்பூசியால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் பெடரல் சுகாதார அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், மரணத்திற்கான காரணங்கள் எதுவும் சிறுவனின் இறப்பு சான்றிதழில் பட்டியலிடப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளால் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் மரணம் தொடர்பிலும், உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என உறவினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.