பிரித்தானியாவில் ரயில் சாரதிகளாக இனி இளைஞர்கள்... ஆண்டுக்கு 60,000 பவுண்டுகள் சம்பளம்
பிரித்தானியாவில் ரயில் சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதால், இனி இளைஞர்களும் ரயில் சாரதிகளாக பணியாற்ற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலை படிப்பை முடித்தவர்கள்
பிரித்தானியாவில் ரயில் சேவைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், இளைஞர்களை ரயில் சாரதிகளாக நியமிக்கும் முடிவுக்கு அமைச்சர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புதிய திட்டத்தின் கீழ், பாடசாலை படிப்பை முடித்தவர்கள் இந்த கோடையில் இருந்தே சாரதிகளாக பயிற்சி முடித்து பணிக்கு திரும்பலாம் என்றே தெரிய வந்துள்ளது.
இவர்கள் ஆண்டுக்கு 60,000 பவுண்டுகள் சம்பளமாக பெற உள்ளனர். தொடர்புடைய திட்டமானது ரயில் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது விடுப்புக்கு சென்றாலோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவும் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் Huw Merriman தெரிவிக்கையில், போக்குவரத்து துறையில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்ய புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.
அதிகமானோரை ஈர்க்கவும் முடியும்
அத்துடன் பாடசாலை படிப்பை முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் ஒரு முயற்சியாக இது இருக்கும் என்றார். மட்டுமின்றி, வயது வரம்பை குறைப்பதால், ரயில் சாரதிகளாக அதிகமானோரை ஈர்க்கவும் முடியும் என்றார்.
லண்டன் சுரங்க ரயில் சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 என இருந்தும், இந்த துறையில் வேலைக்கு சேர்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்றே கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் ரயில் சாரதிகளின் சராசரி வயது என்பது 48 என உள்ளது. ஓய்வுபெறும் ரயில் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இளைஞர்களுக்கு சாரதி வாய்ப்பளிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |