முக்கிய நகரமொன்றின் மொத்த மக்களையும் வெளியேற்ற திட்டம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி
ஈரானின் தலைநகரம் மிக மோசமான கட்டத்தை நெருங்கி வருவதாக அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெறும் 8 சதவீதம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் 15 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட காலியாகிவிட்டதாகவே தெரிய வந்துள்ளது.

மேலும், நகரின் குடிநீர் தேவையில் கால் பங்கை வழங்கும் கராஜ் அணை தற்போது வெறும் 8 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது, குழாய்களில் இருந்து வரும் நீர் விநியோகம் இரவோடு இரவாக குறைக்கப்பட்டுள்ளது அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மக்களை வலியுறுத்தியுள்ளார். தலைநகரம் மொத்தம் அல்லது குறைந்தபட்சம் அதன் சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டிய நிலை வரும் என்றார்.
பொதுவாக ஈரானின் வெப்பமான வறண்ட கோடைக்குப் பிறகு இலையுதிர்காலத்தில் மழை பெய்யத் தொடங்கும். ஆனால் நாட்டின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, இது கடந்த 50 வருடங்களில் முதல் முறையாக செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மிகவும் வறண்ட காலம் என குறிப்பிட்டுள்ளனர்.

நான்கு மடங்காக
குறைந்த மழைப்பொழிவும் அதிக வெப்பமும் இணைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து, நாட்டை வறண்டு போகச் செய்துள்ளது. ஆனால், வெளியான தரவுகளின் அடிப்படையில், 1979 ஆம் ஆண்டில் 4.9 மில்லியனாக இருந்த நகரத்தின் பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை இன்று கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 9.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அத்துடன், நீர் நுகர்வு இன்னும் வேகமாக உயர்ந்துள்ளது, 1976 இல் 346 மில்லியன் கன மீற்றரிலிருந்து தற்போது 1.2 பில்லியன் கன மீற்றராக நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
நீர்த்தேக்கங்களிலிருந்து விநியோகங்களை நிரப்ப, தெஹ்ரான் நிலத்தடி இயற்கை நீர்நிலைகளை நாட வேண்டியிருந்தது, இது சமீபத்திய ஆண்டுகளில் அதன் குழாய் நீரில் 30% முதல் 60% வரை வழங்குகிறது.

ஆனால், இது நகரத்தை விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்தும் வேளாண் மக்களுடன் நேரடிப் போட்டியில் ஆழ்த்துகிறது.
இந்த நிலையில், காலநிலை மாற்றம், குழாய்களில் இருந்து தண்ணீர் கசிவு மற்றும் இஸ்ரேலுடனான 12 நாள் போர் ஆகியவை தண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணம் என்று அரசாங்க அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |