iPhone பயனர்களுக்கு டெலிகிராம் நிறுவனர் எச்சரிக்கை
Telegram CEO Warns iPhone Users of Hack Risks: ஐபோன் பயனர்களுக்கு டெலிகிராம் நிறுவனர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெலிகிராம் நிறுவனரின் அதிர்ச்சி எச்சரிக்கை
ஐபோன் பயனர்கள் தங்கள் சாதனங்கள் முழுமையாக பாதுகாப்பானவை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், டெலிகிராம் நிறுவனர் Pavel Durov முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளமான X-ல் பதிவிட்ட Pavel Durov, "பழைய iOS பதிப்புகளை பயன்படுத்தும் ஐபோன் பயனர்கள் பெரிய அளவில் ஹேக் செய்யப்படுகின்றனர். உங்கள் iOS சிறிதளவு கூட பழையதாக இருந்தால், உங்கள் தரவுகள் அனைத்தும் ஆபத்தில் இருக்கலாம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
அவர் மேலும், சில பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஒரு ஆபத்தான இணையதளத்தை திறப்பது மட்டுமே சாதனத்தை பாதிக்க போதுமானதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பழைய iOS பதிப்புகளுக்கு மட்டுமே ஆபத்து?
டெலிகிராம் நிறுவனம் தற்போது பழைய iOS பதிப்புகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு செயலிக்குள் (in-app) பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த iOS பதிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, எந்த பாதுகாப்பு குறைபாடு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆப்பிள் என்ன கூறுகிறது?
இதுவரை Pavel Durov கூறிய எச்சரிக்கைக்கு தொடர்பாக, iPhone-களை குறிவைத்து பெரிய அளவிலான புதிய தாக்குதல் நடைபெறுகிறது என்று Apple அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு அப்டேட்டையும் வெளியிடவில்லை.
சமீபத்திய இணையத் தாக்குதல்கள்
சமீபத்தில் Zoom, HSBC, CNN, Salesforce மற்றும் Ikea உள்ளிட்ட 178 இணையதளங்களில் தீங்கிழைக்கும் JavaScript குறியீடுகள் புகுத்தப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த தாக்குதல் மூலம் பயனர்களின் கட்டண தகவல்கள், குக்கீக்கள் மற்றும் பிற தரவுகளை திருட முயற்சிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த தாக்குதலுக்கும் தற்போதைய ஐபோன் பாதுகாப்பு எச்சரிக்கைக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
பாதுகாப்பாக இருக்க விரும்பும் ஐபோன் பயனர்கள் உடனடியாக தங்களின் சாதனத்தை சமீபத்திய iOS பதிப்புக்கு புதுப்பிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். Settings > General > Software Update பகுதியில் சென்று அப்டேட்கள் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம். மேலும் Automatic Updates வசதியை இயக்கி வைத்தால், எதிர்கால பாதுகாப்பு மேம்பாடுகள் தானாக நிறுவப்படும்.
பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம்
இணையத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பழைய மென்பொருள்களை தொடர்ந்து பயன்படுத்துவது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பாதுகாப்பு அப்டேட்களை உடனுக்குடன் நிறுவுவது மிகவும் முக்கியமானதாக வலியுறுத்தப்படுகிறது.