பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை... DNA பரிசோதனையில் தெரியவந்த உண்மை: கலங்கிப்போன ஒரு குடும்பம்
பெண் ஒருவர் பத்து மாதம் சுமந்த குழந்தை அவரது குழந்தை அல்ல என்று தெரியவந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள், ஒரு குடும்பத்தையே கலங்கிப்போகச் செய்ய, அந்த காயங்களிலிருந்து விடுபட முயன்றுகொண்டிருக்கிறது ஒரு அமெரிக்கக் குடும்பம்!
இரண்டாவது குழந்தை ஒன்று வேண்டும் என்ற ஆசையில், நீண்ட நாட்களாக குழந்தை உருவாகாததால், செயற்கைக் கருவூட்டல் முறையில் கருவுற்றிருந்தார் Daphna (43).
ஆனால், பத்து மாதம் சுமந்த அந்த குழந்தை பிறந்தபோது, முதல் பார்வையிலேயே அது அவர்களது குழந்தை இல்லை என்பது தெரியவந்தது (அந்த அமெரிக்கத் தம்பதிக்குப் பிறந்தது ஒரு ஆசியக் குழந்தை).
குழந்தை வளர வளர, சந்தேகம் வலுத்த நிலையில், DNA பரிசோதனை ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார் Daphnaவின் கணவரான Alexander Cardinale (41). பரிசோதனையின் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆம், அந்த குழந்தையின் உடலில் Alexanderஇன் DNAவோ, அல்லது Daphnaவின் DNAவோ இல்லை.
அதிர்ந்துபோன தம்பதி, தாங்கள் சிகிச்சை எடுத்த செயற்கைக் கருவூட்டல் மருத்துவமனையை அணுக, அப்போதுதான் தெரியவந்தது, அவர்களது கருமுட்டை வேறொரு பெண்ணின் வயிற்றில் தவறுதலாக வைக்கப்பட்டுவிட்டது என்ற உண்மை.
அதற்குள் நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், பின்னர் அந்த தம்பதியர் வரவழைக்கப்பட்டு உண்மை விளக்கப்பட்டு குழந்தைகள் அதனதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், எழுதுவதைபோல் அது ஒன்றும் எளிதாக இல்லை. காரணம், தான் வயிற்றில் சுமந்து, நான்கு மாதங்கள் பாலூட்டி வளர்த்த குழந்தையை Daphnaவும் கணவரும் பிரியவேண்டும். இன்னொரு பக்கம், தன் சொந்தக் குழந்தை பிறந்த அந்த தருணத்தைத் தவறவிட்டு விட்ட ஏமாற்றம் ஒரு புறம். தன் குழந்தைக்கு வேறொரு பெண் பாலூட்டி வளர்க்க, இப்போது அந்தக் குழந்தையைப் பிரியவேண்டி வர, குழம்பிப்போனார்கள் தம்பதியர்.
அதைவிட ஒரு பெரிய அதிர்ச்சியை அவர்கள் எதிர்கொள்ளவேண்டிவந்தது. ஆம், தம்பதியருக்கு ஐந்து வயதில் Olivia என்றொரு குழந்தை இருக்கிறாள். அவளிடம், இவ்வளவு நாள் நம் வீட்டிலிருந்தது உன் தங்கை அல்ல என்று கூற, அந்த குழந்தை அதைத் தாங்க இயலாமல் கோபத்தில் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலும் நிறுத்திவிட, கலங்கிப்போயிருக்கிறார்கள் தம்பதியர்.
பிறகு, இதுவரை தாங்கள் வளர்த்த அந்த குழந்தையின் பெற்றோருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவ்வப்போது சேர்ந்து வெளியே செல்வதும், குழந்தைகளின் பிறந்தநாளை சேர்ந்து கொண்டாடுவதுமாக சமாளித்துக்கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.
இந்நிலையில், இப்படி ஒரு கடுமையான மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்திய மருத்துவமனை மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் Alexander, Daphna தம்பதியர்...