உக்ரைன் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மறுத்த ரஷ்ய வீரர்: சக வீரர்கள் செய்த பயங்கர செயல்
உக்ரைனில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மறுத்த ரஷ்ய வீரர் ஒருவரை அவரது சக வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
ரஷ்யா பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாது என புடின் கூறிவரும் நிலையிலும், தொடர்ந்து குழந்தைகள் உட்பட பொதுமக்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுவருவதைக் குறித்த செய்திகளைக் கேள்விப்பட்டவண்ணம் இருக்கிறோம்.
இந்நிலையில், ரஷ்ய தரப்பிலிருந்தே அதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, Kharkiv நகரில் ரஷ்ய படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன. அப்போது, ரஷ்யப்படைகள் மீது உக்ரைன் தரப்பு பதில் துப்பாக்கிச்சூடு நடத்த, துப்பாக்கிச்சூட்டின் மத்தியிலும் இரண்டு ரஷ்ய படைவீரர்கள், தாக்குதல் நடக்கும் இடத்திலிருந்த உக்ரைன் நாட்டு பொதுமக்களை அங்கிருந்து தப்பிக்கவைக்க முயன்றிருக்கிறார்கள்.
குறிப்பாக, கார் ஒன்றில் ஒரு இளம்பெண்ணும் அவரது தாயாரும் இருக்க, இந்த இரண்டு ரஷ்ய வீரர்களும் அவர்களைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். ஒருவர் அவர்களை காரிலிருந்து இறக்கி தப்பவைக்க முயன்றிருக்கிறார்.
அப்போது தங்கள் வீரர்கள் எதிரி நாட்டு பொதுமக்களுக்கு உதவுவதைக் கண்ட மற்ற ரஷ்ய வீரர்கள், தங்கள் சக வீரர்கள் என்று தெரிந்தும், அவர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.
அதில் ஒரு ரஷ்ய இராணுவ வீரரும் அவர் காப்பாற்ற முயன்ற அந்த இளம்பெண்ணின் தாயும் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள்.
மற்றொரு வீரரின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய, அந்த நிலையிலும், அவர் அந்த இளம்பெண்ணை அங்கிருந்து பாதுகாப்பாக ஒரு கிடங்கிற்குள் அழைத்துச் சென்றுவிட்டிருக்கிறார்.
துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்ததும், அந்தப் பெண் மெதுவாக சென்று இறந்து கிடந்த தன் தாயிடம் இருந்து கார் சாவியை எடுத்துக்கொண்டு, தன்னைக் காப்பாற்றிய ரஷ்ய வீரரை காரில் ஏற்றிக்கொள்ள, இருவருமாக அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள்.
இதேபோல வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில், ரஷ்ய வீரர் ஒருவர், தாங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மறுத்தால், எழு ஆண்டுகள் சிறை என மிரட்டப்பட்டதாகவும், சிறை செல்ல அஞ்சி போருக்கு வேண்டாவெறுப்பாக பலர் போருக்கு வந்ததாகவும், ரஷ்யர்கள் பலர் போர் வேண்டாம் என்ற மன நிலைமையிலேயே இருப்பதாகவும், போர் செய்ய விரும்பாமல் பல வீரர்கள் ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய ரஷ்ய தளபதி ஒருவரும், உக்ரைனை நாசிக்கள் பிடித்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும், அவர்களிடமிருந்து உக்ரைனை விடுவிப்பதற்காகவே ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாகவும் பொய் சொல்லி ஏமாற்றி, தங்களை உக்ரைனுக்குள் ஊடுருவ வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.