யாராவது தலையிட்டால் வரலாற்றில் இதுவரை சந்திக்காத அளவுக்கு பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கை விடுத்துள்ள புடின்
ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவலைத் துவங்கியுள்ள நிலையில், யாராவது தலையிட்டால், அவர்கள் வரலாற்றில் இதுவரை சந்திக்காத அளவுக்கு பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
உக்ரைன் மீது போர் பிரகடனம் செய்துள்ள ரஷ்ய அதிபர் புடின், இன்று காலை மாஸ்கோவில் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, உக்ரைனின் நட்பு நாடுகளான மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளியிலிருந்து யாராவது தலையிட நினைப்பவர்களுக்கு, நீங்கள் தலையிட்டால், வரலாற்றில் நீங்கள் சந்தித்திராத அளவில் பின்விளைவுகளை சந்திப்பீர்கள் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்னமும் ரஷ்யாவிலிருந்து உக்ரைனியர்கள் யாராவது வெளியேறாமலிருந்தால், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது இராணுவ தாக்குதல் நடத்துவதாக புடின் அறிவித்துள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் Kievவில், வெடிச்சத்தம் கேட்கத்துவங்கிவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.