பிரான்சில் கட்டிடம் ஒன்றில் பயங்கர வெடிவிபத்து... ஏழு பேர் பலியான பரிதாபம்
தென்மேற்கு பிரான்சிலுள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் பலியான பரிதாப சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை 1.30 மணியளவில் Saint-Laurent-de-la-Salanque நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெடிவிபத்தைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தீப்பிடிக்க, தீ மளமளவென பக்கத்திலிருந்த கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. 25 பேர் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஏழு பேர் வரை தீயில் சிக்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
தீப்பற்றிய கட்டிடத்துக்கு அருகில் எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவைதான் தீவிபத்துக்குக் காரணமா என்பது தெரியவில்லை.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் வரை தீயை அணைக்கப் போராடிய நிலையில், மறு நாளும் யாரேனும் கட்டிடத்தில் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்துள்ளது.
இதற்கிடையில், தீயிலிருந்து தப்புவதற்காக இரண்டாவது மாடியின் ஜன்னலிலிருந்து குதித்த தனது 30 வயதுகளிலிருக்கும் ஒருவர், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெடிவிபத்துக்கான காரணத்தை அறிவதற்காக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.