முட்டைகளில் பயங்கர நோய்க்கிருமிகள்... பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்ஸ் முழுவதிலும் குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகளில் முட்டைகள் வாங்கியவர்கள் அவற்றை உண்ணவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
E.Leclerc பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட முட்டைகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த பல்பொருள் அங்காடிகளில் முட்டைகள் வாங்கியோர் அவற்றை வாங்கிய இடத்திலேயே திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த சால்மோனெல்லா கிருமியால் பாதிக்கப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொண்டால், உட்கொண்ட ஆறு முதல் 72 மணி நேரத்திற்குள் வாந்தி முதல் வயிற்றுப்போக்கு வரையிலான பல்வேறு உபாதைகள் ஏற்படும்.
குறிப்பாக, இளம் சிறார் சிறுமியர், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தி குறைபாடுகள் கொண்டோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒருவேளை பாதிக்கப்பட்ட முட்டையை நீங்கள் சாப்பிட்டிருந்தால், உங்களுக்கு அறிகுறிகள் தோன்றுமானால், உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
இந்த சால்மோனெல்லா கிருமி ஆபத்தானதுதான் என்றாலும், பொதுவாக, 65 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சமைக்கப்படும் முட்டைகளில், இந்த கிருமிகள் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.