பெட்ரோல் நிலையத்தில் காருக்கு தீவைத்த நபர்... அது தெரியாமல் காருக்குள் அமர்ந்திருந்த பெண்: ஒரு திடுக் வீடியோ
சீனாவில், பெட்ரோல் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் ஒருவர் தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவிலுள்ள Shenzhen என்ற இடத்தில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஒருவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
அவர் தன் காருக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்க, அங்கு வந்த ஒருவர் சட்டென அந்த பெட்ரோல் நிரப்பும் குழாயை எடுத்து, கார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைக்கிறார்.
தீ சட்டென காரில் பரவ, அது தெரியாமல் காருக்குள் ஒரு பெண் அமர்ந்திருக்க, உடனே காருக்குப் பின்னால் நின்ற அந்த நபர் ஓடோடிச் சென்று அந்த பெண்ணை காரிலிருந்து வெளியேற்ற, இருவருமாக அங்கிருந்து தூரமாக ஓடுகிறார்கள்.
அதற்குள் அந்த பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கிட்டத்தட்ட 10 பேர் வரை வேகமாக வந்து தீஐ அணைத்துள்ளார்கள். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தக் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. தீவைத்த நபரைக் கைது செய்த பொலிசார், அவர் எதற்காக தீ வைத்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.