நெருப்பு கோளமான பிரபல எண்ணெய் ஆலை: நடுங்க வைத்த ஏவுகணை தாக்குதல்
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள எண்ணெய் ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் பயிற்சி அமர்விலிருந்து சில மைல்கள் தொலைவில் நடந்துள்ளது.
இருப்பினும், சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றே நிர்வாகிகள் தரப்பு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் ஆலை மீதே ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது உள்ளூர் பயணிகள் விமானங்கள் கடல் மீது வட்டமிட வலியுறுத்தப்பட்டதாகவும், சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஏவுகணை தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடுத்த 7 ட்ரோன் தாக்குதல்களை தடுத்து அழித்ததாக சவுதி அரேபியா தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்ததற்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றிருந்தனர். குறித்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
2019ல், யேமனில் ஈரானிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் பறக்கவிடப்பட்ட வெடிபொருட்களுடன் கூடிய ட்ரோன்கள் இரண்டு எண்ணெய் பம்பிங் நிலையங்களைத் தாக்கியதாக சவுதி அரேபியா குறிப்பிட்டிருந்தது.
ஆனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதாக கூறி முன்னெடுக்கப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சவுதி அரேபியா கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
தற்போது சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் முன்னெடுக்கப்படும் சூழலில், ஹூதிகள் நடத்திய ஏவுகணை சம்பவமானது சர்வதேச வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தாலும், போட்டிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றே நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.