வருடத்திற்கு 1 டிரில்லியன் டொலர் சம்பளம்... கனவை நிறைவேற்றி வரலாறு படைக்கும் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் குழு ஒப்புதல் அளித்து வாக்களித்துள்ளதால், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் இனி வருடத்திற்கு 1 டிரில்லியன் டொலர் சம்பளம் வாங்க இருக்கிறார்.
முதல் டிரில்லியனராக
டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ள வளர்ச்சி இலக்குகளை அடைந்தால், உலகின் முதல் டிரில்லியனராக எலோன் மஸ்க் மாறக்கூடும்.

வியாழக்கிழமை நடைபெற்ற டெஸ்லாவின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில், 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் மஸ்க்கின் பங்கு அடிப்படையிலான சம்பளத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அவர் ஏற்கனவே வைத்திருக்கும் 15 சதவீத பங்குகளைத் தவிர்த்து இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டொலர் சம்பளம் தொடர்பில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அரங்கம் ஆரவாரத்தாலும், முழக்கங்களாலும் அதிர்ந்தது.
பங்குதாரர்களின் முடிவை மிகப் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, பங்குதாரர்களுக்கும் டெஸ்லாவின் நிர்வாகக் குழுவிற்கும் அவர்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மஸ்க் பதிலளித்துள்ளார்.
உலகின் பெரும்பாலான பெருநிறுவன நிர்வாக அதிகாரிகள் போன்று மஸ்க் டெஸ்லாவில் இருந்து சம்பளம் பெறுவதில்லை. மாறாக, டெஸ்லாவில் இருந்து பங்குகளாக அவர் பெற்றுக்கொள்கிறார்.

தற்போது இந்தப் புதிய ஒப்பந்தமானது அடுத்த பத்தாண்டுகளில் அவருக்கு 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளை வழங்கக்கூடும். டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8.5 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டினால், சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள சாத்தியமான சம்பளம் அவருக்கு கிடைக்கும்.
பங்குதாரர்களுக்கு எச்சரிக்கை
ஆனால், கடும் போட்டி மிகுந்த சூழலில், தற்போதைய டெஸ்லா பங்கு விலையில் இருந்து 466 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படியான ஒரு கட்டம் வந்தால், தற்போது உச்சத்தில் இருக்கும் Nvidia நிறுவனத்தின் சந்தை மதிப்பை டெஸ்லா முந்தும்.
Nvidia தற்போது 5 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்புடன் உலக அளவில் முதல் நிறுவனமாக உச்சத்தில் உள்ளது. மேலும், திட்டமிட்டபடி டெஸ்லாவின் பங்குகள் விலை அதிகரித்தால், மஸ்க்கின் நாள் ஒன்றிற்கான வருவாய் 275 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகராக இருக்கும்.

டிரில்லியன் டொலர் சம்பளம் என்ற மஸ்க்கின் கனவு திட்டத்தை நிராகரிப்பது அவரை நிறுவனத்திலிருந்து வெளியேறத் தூண்டக்கூடும் என்று டெஸ்லா நிர்வாகம் பங்குதாரர்களுக்கு எச்சரித்திருந்தது.
இதில் டெஸ்லாவின் மிக முக்கியமான பங்குதாரரான நோர்வே அரசு வங்கி மஸ்க்கின் இந்த டிரில்லியன் டொலர் சம்பளத்திற்கு எதிர்த்து வாக்களிக்க இருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |