Tesla காரை குண்டு வைத்து வெடிக்கச்செய்த உரிமையாளர்! வைரல் வீடியோ
பின்லாந்தில் Tesla கார் ஒன்றை அதன் உரிமையாளர் டைனமைட் கொண்டு சுக்குநூறாக வெடிக்கவைத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான Tesla, மின் வாகன (Electric Vehicle) துறையில் புதிய தொழில்நுட்பங்களுடன் அட்டகாசமான கார்களை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது.
ஆனால், அந்த நிறுவனம் பின்லாந்தில் உள்ள ஒரு வாடிக்கையாளரை திருப்திப்படுத்த முடியவில்லை.
ஒரு கட்டத்தில் கடுப்பான அந்த நபர், தனது Tesla காரை டைனமைட் வெடிகுண்டுகளைப் பொருத்தி சுக்குநூறாக வெடிக்கவைத்து, அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். YouTube-ல் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தெற்கு பின்லாந்தின் Kymenlaakso பகுதியில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே வசிக்கும் ஜாலா எனும் ஒரு அழகிய மற்றும் பனி மூடிய கிராத்தில் தனது காரை அவர் வெடிக்கச்செய்தார்.
இதற்காக, மொத்தம் 30 கிலோகிராம் எடைகொண்ட Dynamite வெடிமருந்துகளைப் பயபபடுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த காருக்குள் Tesla நிறுவனர் Elon Musk-ன் உருவபொம்மையையும் வைத்து வெடிக்கச்செய்துள்ளார்.
Pommijatkat எனும் ஒரு யூடியூப் சேனலின் குழுவினர் இந்த முழு நிகழ்வையும் ஒரு சில தன்னார்வலர்களின் உதவியுடன் படமாக்கியுள்ளனர்.
இது குறித்து பேசிய, அந்த 2013 வெள்ளை நிற Tesla Model S காரின் உரிமையாளர் Tuomas Katainen, "நான் அந்த டெஸ்லாவை வாங்கியபோது, முதல் 1,500 கி.மீ. நன்றாக இருந்தது. அது ஒரு சிறந்த கார். பின்னர் சில errorகள் காண்பித்தன. அதனால் என் காரை சர்வீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லும்படி இழுவை டிரக்கை ஆர்டர் செய்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதமாக கார் டீலரின் பட்டறையில் இருந்தது.
இறுதியாக எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்களால் என் காருக்கு எதுவும் செய்ய முடியாது. பேட்டரி செல் முழுவதையும் மாற்றுவதுதான் ஒரே வழி என்று கூறினர்."
இதற்கு 20,000 யூரோக்களுக்கு மேல் செலவாக்கலாம். "எனவே, நான் எனது காரை எடுக்க வருகிறேன் என்று அவர்களிடம் சொன்னேன். இப்போது நான் முழு காரையும் வெடிக்கச் செய்யப் போகிறேன் என்று சொன்னேன்" என்று அவர் கூறினார்.
இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களில் 2.23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்தது. அந்த கார் வெடித்துச்சிதரும் காட்சி பல்வேறு கோணங்களில், ஸ்லோ மோஷனிலும் காட்சிப்படுத்தப்பட்டது.
கடைசியில், குழுவினரும் உரிமையாளரும் சிதறிய குப்பைகளைச் சேகரித்து, அவற்றை ஒரு குவியலாகக் குவித்தனர்.
வீடியோவில் கடைசியாக பேசிய காரின் உரிமையாளர், "நான் டெஸ்லாவை இந்த அளவுக்கு ரசித்ததில்லை! மேலும், டெஸ்லாவை வெடிக்கவைத்த உலகின் முதல் நபர் நானாக இருக்கலாம். இது ஒரு வரலாறாக உருவாக்கப்படலாம்" என்றார்.