ஐரோப்பா முழுவதும் தீயாக பரவும் டெஸ்லா எதிர்ப்பலை: மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
இத்தாலியில் உள்ள எலோன் மஸ்க்கின் முதன்மையான டீலர்ஷிப்களில் ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் ஒரு டசினுக்கும் மேற்பட்ட டெஸ்லா கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
17 டெஸ்லா கார்கள்
ரோமில் 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கிய சம்பவத்தை அடுத்து, இதுவரை அமெரிக்காவில் மட்டுமே டெஸ்லா டீலர்ஷிப்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் தற்போது ஐரோப்பாவிலும் பரவியுள்ளது.
ரோமில் மொத்தமாக 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ரோமின் தீயணைப்பு சேவை தெரிவிக்கையில், சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியது.
ஆனால் அது தீ வைப்பு சம்பவமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளது. நிறுவன உரிமையாளர் எலோன் மஸ்க்கின் வலதுசாரி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பல நாடுகளில் டெஸ்லா கார்கள் இலக்காகி வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, திட்டமிடப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஐந்து டெஸ்லா வாகனங்கள் சேதமடைந்தன, இரண்டு கார்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றவை துப்பாக்கிகளால் சுடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
கடந்த வாரம், டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள ஒரு டெஸ்லா டீலர்ஷிப்பில் பல தீவைக்கும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் முதல் முறையாக டெஸ்லா மீதான தாக்குதல் ஜேர்மனியின் பெர்லினில் துவங்கியது.
உள்ளூர் பயங்கரவாதம்
நான்கு டெஸ்லா கார்கள் மீது தீ வைப்பு சம்பவம் முன்னெடுக்கப்பட்டது. தீவிர வலதுசாரி AfD கட்சியை எலோன் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்து தேர்தலில் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையிலேயே, பல எண்ணிக்கையிலான டெஸ்லா எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தது..
மேலும் டெஸ்லா தொழிற்சாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவில் பல மாகாணங்களில் டெஸ்லா டீலர்ஷிப்கள் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெஸ்லா கார்களுக்கு எதிரான அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்களை விசாரிக்க FBI தற்போது ஒரு சிறப்புப் பணிக்குழுவைத் தொடங்கியுள்ளது. டெஸ்லா மீதான தாக்குதல்களை உள்ளூர் பயங்கரவாதம் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் அடையாளப்படுத்தி வருகிறது.
இதனிடையே, கோபமடைந்த டொனால்ட் ட்ரம்ப், டெஸ்லா மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ளதுடன், தமது முழு ஆதரவும் டெஸ்லா நிறுவனத்திற்கு இருப்பதாக அறிவித்தார்.
மேலும், டெஸ்லா மீது தாக்குதலில் ஈடுபடுவோர் உலகின் மிக மோசமான எல் சால்வடோர் சிறைகளில் தங்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |