ஐரோப்பாவில் எலோன் மஸ்கால் டெஸ்லா விற்பனை கடும் வீழ்ச்சி
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், முக்கிய ஐரோப்பிய சந்தைகளில் டெஸ்லாவின் விற்பனை மார்ச் மாதத்தில் மீண்டும் சரிவடைந்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது மாதமாக
சீனாவின் போட்டி அதிகரித்து வருவதாலும், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்கின் அரசியல் கருத்துக்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், சாரதிகள் டெஸ்லா மின்சார கார் பிராண்டைத் தவிர்ப்பதாகவே தரவுகளில் தெரிய வந்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனில் புதிய டெஸ்லா விற்பனை தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிவடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளிலும் அதன் மிகக் குறைந்த முதல் காலாண்டு விற்பனை இதுவென்றே கூறப்படுகிறது.
பெரும் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு கார் பிராண்ட் இதற்கு முன்பு இவ்வளவு உலகளாவிய வீழ்ச்சியைச் சந்தித்ததில்லை என்றே மின்சார கார் துறையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீவிர வலதுசாரிகளை ஆதரிக்கும் எலோன் மஸ்கின் அரசியல் நிலைப்பாடால் டெஸ்லா கார்கள் மற்றும் டீலர்ஷிப்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. சமீபத்திய நாட்களில் ரோம், பெர்லின் மற்றும் ஸ்டாக்ஹோம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நகரங்களில் டசின் கணக்கான கார்கள் நெருப்பு வைக்கப்பட்டன.
பிரான்சில் கடந்த மாதம் 3,157 டெஸ்லா கார் விற்பனையும், ஸ்வீடனில் 911 கார்களும், நோர்வேயில் 2,211 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டை விட முறையே 36.83%, 63.9% மற்றும் 1% குறைந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க் பங்குச்சந்தையில்
டென்மார்க்கில் மொத்தமாக 593 டெஸ்லா கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட 65.6 சதவீதம் சரிவடைந்துள்ளது. நெதர்லாந்தில் 1,536 கார்கள் விற்பனையாகியுள்ளது, இது 61 சதவீத சரிவை எதிர்கொண்டுள்ளது.
பிரான்சில் காலாண்டு விற்பனை 41.1%, ஸ்வீடனில் 55.3%, நார்வேயில் 12.5%, டென்மார்க்கில் 55.3% மற்றும் நெதர்லாந்தில் 49.7% குறைந்துள்ளது. இருப்பினும், ஸ்பெயின் நாட்டில் மார்ச் மாதம் மட்டும் டெஸ்லா கார்களுக்கான முன்பதிவு 34.3 சதவீதம் எனவும் இத்தாலியில் 51.3 சதவீதம் எனவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், ஸ்பெயினில் 11.8 சதவீத சரிவும் இத்தாலியில் 6.8 சதவீத சரிவும் பதிவாகியுள்ளது. மட்டுமின்றி, நியூயார்க் பங்குச்சந்தையில் 6.8 சதவீதம் வரையில் டெஸ்லா பங்குகள் சரிவடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |