அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத பெருவெள்ளம்: 23 சிறுமிகளைக் காணவில்லை!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர் கவுண்டியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறுமிகளைக் காணவில்லை
கெர் கவுண்டியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 23 சிறுமிகளைக் காணவில்லை. பல மாதங்களில் பெய்ய வேண்டிய 25 சென்டிமீட்டர் (10 இன்ச்) மழை, சில மணிநேரங்களிலேயே கொட்டித் தீர்த்ததால் இந்த பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
இந்தக் கனமழையால் தென்-மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் நீர்மட்டம் இரண்டு மணி நேரத்தில் பல அடி உயர்ந்து, அபாயகரமாக பெருக்கெடுத்து ஓடியது.
ஆறு கரைபுரண்டு ஓடியதால், அதன் அருகிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் வீடுகளும், வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. பலர் தங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த துயர சம்பவத்தின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கோடைக்கால முகாம் நடந்து கொண்டிருந்தது. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன சிறுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு பணிகள் தீவிரம்
400க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்பது மீட்புக் குழுக்கள், 14 ஹெலிகாப்டர்கள், 12 ட்ரோன்கள் மற்றும் ஏராளமான படகுகள் இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பெய்த கனமழையால், மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இது அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |