“உன் மகனை எனக்கு விற்றுவிடு“ குழந்தைகளுடன் கடைக்கு சென்ற தாயிடம் கேட்ட பெண்ணால் பரபரப்பு
அமெரிக்காவில், ஒரு பெண், சிறுவன் ஒருவனை தனக்கு விற்றுவிடும்படி அவனது தாயைத் தொந்தரவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
டெக்சாஸில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் சென்றுள்ளார். கையில் ஒரு வயது குழந்தை ஒன்றை வைத்திருந்த அவர், தனது மகனையும் அழைத்துக்கொண்டு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர்களை நெருங்கிய Rebecca Lanette Taylor (49) என்ற பெண், அந்த சிறுவனின் நீல நிற கண்களும், அவனது தங்க நிற தலைமுடியும் அழகாக இருக்கிறது, அவனது விலை என்ன என்று கேட்டிருக்கிறார்.
அவர் வேடிக்கையாக பேசுவதாக நினைத்த அச்சிறுவனின் தாய், சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். ஆனால், விடாமல் அவரைத் தொடர்ந்த Rebecca, நான் காரில் 250,000 டொலர்கள் வைத்திருக்கிறேன் என்று கூறி தொடர்ந்து சிறுவனைக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்த, விலகிச் செல்லுங்கள் என சத்தமிட்டிருக்கிறார் அந்த சிறுவனின் தாய்.
பொருட்களை வாங்கி முடித்துவிட்டு அந்தப் பெண் வீட்டுக்குப் புறப்படும்போதும் அவருக்காக காத்திருந்த Rebecca, தனது காரை நோக்கி சென்ற அந்த பெண்ணிடம், தான் அந்தச் சிறுவனுக்கு 500,000 டொலர்கள் வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும், அவனை அடைந்தே தீருவேன் என்றும் கார் பார்க்கிங்கின் மறுபுறம் இருந்து கத்த, சிறுவனின் தாய் நேராக பொலிசாரிடம் சென்றுவிட்டிருக்கிறார்.
அவரது புகாரைத் தொடர்ந்து Rebecca கைது செய்யப்பட்டுள்ளார். டெக்சாஸில் குழந்தையை விற்பதோ, வாங்குவதோ சட்டப்படி மூன்றாம் நிலை குற்றம் ஆகும்.
குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், Rebecca 10 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட நேரிடுவதுடன், 10,000 டொலர்கள் அபராதமும் செலுத்தவேண்டியிருக்கும்.