நீச்சல் பயிற்சி கற்றுக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வாழலாம் என்பது மூதோர் வாக்கு, கைத்தொழில் போலவே, நீச்சல் அறிந்த ஒருவர், வாழ்வில் தன்னம்பிக்கையுடன் வாழமுடியும்.
தினமும் உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லாதவர்கள், அடிக்கடி நீச்சல் மேற்கொண்டாலே, உடற்பயிற்சி மூலம் அடையும் எல்லா உடல் நலனையும் பெற்று நலமுடன் வாழலாம்.
நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது நீச்சல்.
உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைகிறது. உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். நீச்சலின்போது நீரானது உடலுக்கு தேவையான இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.
பொதுவாக கிராமங்களில் உள்ள சிறுவர் சிறுமியர் எல்லோரும் நீச்சல் அறிந்திருப்பார்கள். அதற்கு காரணம், அநேக கிராமங்களில் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் மற்றும் கிணறு போன்ற நீர்நிலைகள் மிகுந்து இருப்பதுதான்.
நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை, செயற்கை நீச்சல் குளங்களில் நகரத்து இளைஞர்கள் பயிற்சி பெற்றாலும், அவர்கள் வெளிப்புற நீர்நிலைகளில் இறங்கி, நீச்சலடிக்க அச்சம் கொள்கின்றனர் என்பதே உண்மை. நகரங்களில் உள்ள நீச்சல் குளங்களில், பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுப்பார்கள், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள், நன்கு நீச்சல் அறிந்தவர்கள் துணையுடன் கற்றுக்கொள்ள, விரைவில் நீச்சல் வசப்படும்.
நீச்சல் பழக சிறந்த நீர்நிலை?
தண்ணீரில் கரண்ட் எனும் நீரோட்டம் இல்லாத நீர்நிலைகளில்,ஆரம்ப பயிற்சியை மேற்கொள்ள எளிதாக இருக்கும். கிராமங்களில் உள்ள குளங்கள் ஆரம்ப நீச்சலுக்கு ஏற்றவையாகும். முதன்முறையாக நீச்சல் பழகுபவர்கள் நீச்சல் அறிந்தவர்களின் கைகால்கள் அசைவை கவனித்து, அதுபோல பயிற்சிசெய்துவரவேண்டும். ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல், இடுப்பளவு நீரில், முதலில் நீச்சல் பழகவேண்டும்.
நீச்சலின் பயன்கள்
- உடலில் உள்ள தேவையற்ற எடை குறைவதுடன், தொப்பையைக் குறைக்கும்.
- நீச்சலின் போது, நீர், உடலுக்கு இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.
- உடலின் உள் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் பயிற்சி கிடைப்பதால், அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
- மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்கும். நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலையடைகிறது.
- உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
- கை, கால், தொடைப் பகுதி தசைகள் வலுப்பெறுவதுடன், மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்கும்.
- இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் முடிச்சுகள் பலம் பெறுகின்றன.
- கழுத்து வலி, தோள்பட்டை வலி நீங்கும்.
- செரிமான சக்தியைத் தூண்டி, அஜீரணக் கோளாறை போக்கும். நன்கு பசியை தூண்டச் செய்யும்; மலச்சிக்கல் நீங்கும்.
- ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகும்.