பரிதாப கோலத்தில் குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: நொறுங்க வைக்கும் பின்னணி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பட்டினியால் பரிதாப கோலத்தில் 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திடீரென்று ஒருநாள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 11 வயதேயான ரோமன் லோபஸ் என்ற சிறுவனின் சடலம் அவர்களது குடியிருப்பின் குப்பைத் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வியாழக்கிழமை Placerville பொலிசாரே வெளியிட்டுள்ளனர். உடற்கூராய்வுகளின்படி, சிறுவன் ரோமன் பட்டினி கிடந்து நீரிழப்புடன் இருந்ததாகவே தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில், சிறுவன் ரோமனின் வளர்ப்பு தாயார் லிண்ட்சே பைபர்(38), மற்றும் தந்தை ஜோர்டான் பைபர்(36) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், சிறுவன் ரோமனின் குடிநீரில் நச்சு கலந்ததாகவும் லிண்ட்சே பைபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமது மகன் மாயமானது தொடர்பில் தாம் பொலிசாருக்கு புகார் அளித்தும் அவர்கள் மெத்தனமாக நடந்து கொண்டதாகவும், சுமார் 15 மணி நேரத்திற்கு பின்னரே தமது மகனை அவர்கள் சடலமாக மீட்டதாகவும் ஜோர்டான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது மகனை அவர்கள் எங்கிருந்து மீட்டார்கள், சிறுவனுக்கு என்ன ஆனது, உடற்கூராய்வில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என குறிப்பிட்டுள்ள ஜோர்டான், ஏதாவது நடக்க கூடாதது நடந்திருந்தால், யார் மீதாவது பொலிசாருக்கு சந்தேகம் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விவகாரத்தில் தங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
