அழுகிய சடலத்துடன் வாழ்ந்த சிறுவர்கள்... இறந்து கிடந்த சிறுவன் யார்?: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்கள்
அமெரிக்காவில் வீடு ஒன்றில் அழுகி உருக்குலைந்த சடலத்துடன் அநாதரவாக விடப்பட்ட மூன்று சிறுவர்கள் வாழ்ந்துவந்த விடயம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இறந்த சிறுவன் யார், அவனைக் கொலை செய்தது யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
டெக்சாசில் வாழும் ஒரு சிறுவன் பொலிசாரை அழைத்ததின் பேரில் அவனது வீட்டுக்குச் சென்ற பொலிசார், முறையே 7, 10 மற்றும் 15 வயதுடைய மூன்று பிள்ளைகள் தனிமையில் வாழ்ந்துவருவதையும், அந்த வீட்டில் மற்றொரு சிறுவனின் உடல் அழுகி உருக்குலைந்த நிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடந்தது என்னவென்றால், Gloria Y. Williams (35) என்ற பெண்ணும், அவரது காதலரான Brian W. Coulter (31) என்பவரும், Gloriaவின் பிள்ளைகளை வீடு ஒன்றில் அநாதரவாக விட்டு விட்டு வேறொரு வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
Gloriaவின் மகனான Kendrick Lee (8) என்ற சிறுவனை அடித்துக் கொன்றிருக்கிறார் Coulter. அவனது உயிரற்ற உடலை பெட்டி ஒன்றிற்குள் வைத்துவிட்டு, மற்ற பிள்ளைகளான Jordan Lee (15), Trevon Lee (10), மற்றும் Ja'Veon Kirklin (7) ஆகிய பிள்ளைகளை அதே வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் வேறொரு வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
தகவலறிந்து தம்பதியரை தேடிய பொலிசார், அவர்கள் அருகிலுள்ள நூலகம் ஒன்றில், Gloriaவின் மகனான Kendrickஇன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த செய்தியை படித்துக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை கைது செய்துள்ளார்கள்.
குழந்தைகளை அநாதரவாகக் கைவிட்டுச் சென்றதாக Gloria மீதும், குழந்தை Kendrickஐ அடித்துக் கொன்றதற்காக Coulterமீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.